ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது! – AanthaiReporter.Com

ஸ்மார்ட் போன்கள் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுகிறது!

உள்ளங்கையில் அடங்கி விட்ட தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியது கொஞ்சம் வரம் என்றாலும் பல வகையில் சாபம்தான் என்பதை பலரும் அறிந்தாலும் அவாய்ட் செய்வதில்லை..பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சுவாமி, திரைமறைவில் பல பகீர் காரியங்களைச் செய்வதற்கு இணையான வேலையைத்தான் இன்று ஸ்மார்ட்போன்கள் நமக்கு செய்துகொண்டிருக்கிறது. இத்தலைய ஸ்மார்ட்போனால் உடலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக பல்வேறு ஆபத்துகள் புதிதுபுதிதாக உருவாகிக் கொண்டிருப்பதை நாள்தோறும் ஏதேனும் ஓர் ஆய்வு நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதினால் மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் பெரும்பாலும் பேன்ட் பாக்கெட்டில் மொைபலை வைப்பதால், உயிரணு உற்பத்தி குறையவும் சாத்தியம் உள்ளது. ஹெட்போன் மாட்டிக்கொண்டு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது, சத்தமாக பாட்டுகேட்பது போன்ற பழக்கத்தால் கேட்கும் திறன் குறைவதுடன் மூளைக்குச் செல்லும் நரம்புகளும் சேதப்படும் என்பதெல்லாம் பழைய எச்சரிக்கைதான். கூடவே  மனநல பிரச்னைகள் அனைத்தும் தீவிரமானவை. இதுகுறித்து பெற்றோர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் அல்லது அதற்கு மேல் மின்னணு சாதனங்களில் நேரத்தைச் செலவிடும் 48 சதவிகித இளைஞர்களிடம் தற்கொலை தொடர்பான நடத்தைக் காணப்படுவது தர்போது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது 28 சதவிகித இளைஞர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே மின்னணு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் அந்த நடத்தை இல்லை. மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சியற்று இருப்பார்கள். உடற்பயிற்சி, நண்பர்களுடன் பேசுதல், ஆலயத்துக்குச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து 13 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் மன அழுத்தம் மற்றும் தற்கொலையைத் தூண்டுவது அதிகரித்துள்ளது.இவர்களுக்குத் தூங்கும்போதுகூட மெசேஜ் ஒலி கேட்பதுபோன்ற பிரமையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒரு கட்டத்துக்குமேல் அடிமைத்தனமாக மாறிவிடுகிறது. ஒரு நிமிடம் இல்லாவிட்டாலும் பதற்றம் அடைந்துவிடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஏதோ தனிமைப்படுத்தப்பட்டதுபோல் உணரத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த உணர்வு அவர்களை மன அழுத்தத்துக்கும், மனப்பதற்றத்துக்கும் கொண்டு செல்கிறது.

அலாரம், நினைவூட்டல், கலோரிகள் கணக்கு, எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம், தூங்கியிருக்கிறோம் என ஒருநாளில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்மார்ட்போனை சார்ந்து இருப்பதால்தான் இந்த பிரச்னையே உருவாகிறது. இதனால் Obesessive Compulsive Disorder போன்ற மனநலப் பிரச்னைகளுக்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

எல்லா தொடர்புகளுக்கும் சாட், டெக்ஸ்ட் மெசேஜ், மெயில், வீடியோ என ஸ்மார்ட்போனையே பயன்படுத்துபவர்கள் நேரடியான சமூகத் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில்லை. நேரடி சமூகத் தொடர்பில் இல்லாத இவர்கள், குறிப்பிட்ட சூழ்நிலையில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

இதன் காரணமாகவே  இளைஞர்களிடையே தற்கொலை விகிதம் 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை 31 சதவிகிதம் அதிகரித்தது. தேசிய ஆய்வு ஒன்றில் கடுமையான மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 65 சதவிகிதம் பேர் தற்கொலையாலும், 58 சதவிகிதம் பேர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.