சிங்கப்பூரில் தமிழ் : அதிகாரப்பூர்வ மொழியாக தொடர்ந்து நீடிக்கும்! – AanthaiReporter.Com

சிங்கப்பூரில் தமிழ் : அதிகாரப்பூர்வ மொழியாக தொடர்ந்து நீடிக்கும்!

கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் திட்டமிட்டபடி நவீன சிங்கப்பூர் நகரம் உருவாக ஆரம்பித்த நேரம். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து தமிழர்களை பல்வேறு வேலைகளுக்கு என்று கப்பலில் கூட்டி வந்தனர். பெரும்பாலும் சாலை அமைக்கும் பணியைப்போலக் கடினவேலைகளுக்கு என்று சொல்லலாம். இதில் ஆங்கிலேய ஆட்சியில் ‘குற்றவாளிகள்’ என்று சிறைபடுத்தப் பட்டோரும் அதிகம். தண்டனையின் ஒரு பகுதியாக தீவின் காடுகளை அழித்து அப்புறப்படுத்தி, சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். சிலருக்கு காடுகளைச் செம்மைப்படுத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக மாற்றும் அரும்பணியும் உண்டு. கடும் வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்து குறைந்த கூலியைப் பெற்றனர்.

இது தவிர, தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சி காரணமாக பிழைப்பு தேடிய சில தமிழர்களை சிங்கப்பூர் இழுத்தது. வேலையும் வணிகமும் செய்தனர் இவர்கள். காவல்துறையிலும் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்படியெல்லாம் வந்தவர்களின் சந்ததியினர் தான் இன்றைய சிங்கப்பூர் தமிழர்களின் பெரும்பகுதியினர். இதில் இஸ்லாமியர்களும் அடங்குவர். இன்றைய வளர்ச்சியடைந்த சிங்கப்பூரின் செழுமைக்கு தமிழர்களின் பங்கும் உண்டு

இதையடுத்து இன்றும் சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று அங்குள்ள தமிழ் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்தது.

அதில் அமைச்சர் கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.