கிறிஸ்துமஸ் பாடல்களின் மன்னனான ‘சைலன்ட் நைட்’ பாடல் தோன்றிய வரலாறு!

கிறிஸ்துமஸ் பாடல்களின் மன்னனான  ‘சைலன்ட் நைட்’ பாடல் தோன்றிய வரலாறு!

கிறிஸ்துமஸ் கரால் பாடல்களில் உலகப்புகழ் பெற்ற பாடல் ‘அமைதியான இரவு‘ (Silent Nigth) என்ற பாடல். இந்தப் பாடல் தோன்றிய விதை சுவையானது.

ஜெர்மனி நாட்டின் சால்ஸ்பர்க் அருகே உள்ள நகரம் ஒபன்டார்ப். இங்கே உள்ள புனித நிகோலாஸ் தேவாலயத்தில் பஙகுத்தந்தையாக இருந்தவர் ஜோசப் மோர். 1818ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம்தேதி அந்திமாலையில் இவர் கிறிஸ்துமஸ் திருப்பலி பூசைக்குத் தயராக கோவிலுக்கு வந்தார். திருப்பலி பூசையில் இன்னிசை அமர்க்களப்பட வேண்டும் என்ற ஆவலுடன் ஆலய ஆர்கன் இசைக்கலைஞர் பிரான்ஸ் குரூப்பரும் அங்கு வந்திருந்தார்.

ஆனால், ஆர்மோனியத்தைத் திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ஆர்மோனியத்தின் பெல்லோசை எலி கடித்துச் சுவைத்திருந்தது. அவ்வளவுதான். இனி ஆலயத் திருப்பலிப் பூசையில் எப்படி இன்னிசையை முழக்கப்போகிறோம் என்ற கவலை அவர்களை ஆட்கொண்டது.இன்னும் சில மணிநேரத்தில் கிறிஸ்துமஸ் பூசை தொடங்கிவிடும். அதற்குள் ஆர்மோனியத்தை சரிபார்க்க முடியாது. வெளியே பனி கொட்டுவதால் வேறு இடத்தில் இருந்து ஆர்மோனியத்தை வாங்கி வரவும் வாய்ப்பு இல்லை. கிறிஸ்துமஸ் இரவில் ஆர்கன் இசைக்கருவி எல்லோருக்கும் தேவை யாயிற்றே. யார் இரவல் கொடுப்பார்கள்?

இந்தநிலையில் ஜோசப் மோரின் மனதில் புதிய எண்ணம் எழுந்தது. இன்றைய இரவுத் திருப்பலி யில் ஆர்கன் இசைக்கருவி இல்லை என்ற குறையே இல்லாமல் அற்புதமான ஒரு பாடலை இசைக்கவேண்டும். அதன் இனிமையில் மக்கள் மெய்மறக்க வேண்டும். ஆர்கன் ஒலிக்கவில்லை என்ற குறையே அவர்களுக்கு ஏற்படக்கூடாது. ஆர்கன் கருவி பழுதான விவரம் யார் நினைவுக்கும் வரக்கூடாது.

ஜோசப் மோர் ஒரு முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய ‘சைலன்ட் நைட்’ என்ற பாடலுக்கு, பிரான்ஸ் குரூப்பரின் உதவியுடன் இசைவடிவம் கொடுத்தார். ஒற்றைக் கிடார் கருவியின் உதவியுடன் ஒத்திகை நடந்தது. அன்று நள்ளிரவில் ஆலய மணிகளின் பின்னணி இசையுடன் முதன்முறை இந்தப் பாடல் இசைக்கப்பட்டது. அதன்பிறகு இந்தப் பாடல் ஒலிக்காத கிறிஸ்துமசே இல்லை என்று கூறி விடலாம். உலகம் முழுவதும் 320 மொழிகளில் இந்தப் பாடல் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கிறிஸ்துமஸ் பாடல்களின் மன்னன் என்று இந்த ‘சைலன்ட் நைட்’ பாடலைத்தான் குறிப்பிட வேண்டும். கிறிஸ்துமஸ் கரால் பாடல்களில் கடைசியாகப் பாடப்படும் பாடலும் இதுதான். அதிலும், ஆலயத்தின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தப் பாடலைப் பாடுவது மரபு.

காலங்களைக் கடந்து இன்றும் உலகம் முழுக்க ஒலிக்கிறது இந்த ஒப்பற்ற பாடல்.

மோகன ரூபன்

error: Content is protected !!