‘உளவியலின் தந்தை’ என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட்! – AanthaiReporter.Com

‘உளவியலின் தந்தை’ என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃப்ராய்ட்!

சைக்காலஜி என்ப்படும் உளவியல் என்றவுடன் பலருடைய மனதிலும் தோன்றும் முதல் பிம்பம் சிக்மண்ட் ஃபிராய்டாகத்தான் இருக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனை யாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.’காமத்தின் மூலம் கடவுள்’ என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே ‘காமத்தின் மூலம் உளவியல்’ என்ற கோட்பாட்டை முன் வைத்தவர்.

ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினை களே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.

அதாவது ஆரம்பம் முதலே உடல் சம்பந்தபட்ட கிட்டதட்ட எல்லா நோய்களையுமே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனுகுலத்திற்கு இருந்தது. ஆனால் மனநோயை அவ்வாறு ஏற்றுக்கொள்ள ஏனோ மனுகுலம் தயங்கியது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மனநோயை ஒரு சமூக அவலமாகவும், கேவலமாகவும்தான் பெரும்பாலோர் கருதினர். மனநோயாளிகளை உறவினர் களாக கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே அவர்களை தீண்டத் தகாதவர்களாகவும், ஏன் சாத்தானின் படைப்புகளாககூட பார்த்தனர், நடத்தினர். ஆனால் மனநோயும் உடல்நோயைப் போன்றதுதான் அது சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றுதான் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருவர் துணிந்து கூறினார். மேலும் நாம் காணும் கனவுகளின் பொருள் பற்றியும் பல ஆய்வுகளை செய்து அதுவரை கூறப்படாதவற்றை தைரியமாக கூறி உலகின் புருவங்களை உயர்த்தினார். அவர்தான் ‘psycho analysis’ என்ற உளபகுப்பாய்வு முறையை உருவாக்கித் தந்த உலகம் போற்றும் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

ஃபிராய்ட் முதன் முதலில் “இணங்க வைக்கும் கோட்பாடு” (Seduction theory) என்ற கோட்பாட்டைக் கண்டறிந்தார். அதன்படி ’மனப் பிறழ்வு ஏற்படும் ஒவ்வொரு மனிதனும், தான் குழந்தையாக இருந்த போது பாலியல் ரீதியாக ஒரு பெரிய மனிதரால் காமத்துக்கு இணங்க வைக்கப்பட்டு, அதனால் உள்ளம் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பின் விளைவாக உளவியல் நெருக்கடிக்கு ஆளாகி, அதன் விளைவாக மன நலம் பாதிக்கப்பட்டவர்களே.’ இதற்கு ஆதாரமாகப் பல மனப்பிறழ்வு நோயாளிகளை ஆய்வு செய்து தக்க ஆதாரங்களைத் திரட்டினார். இந்தக் கோட்பாடு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பெரும் எதிர்ப்புக்குள்ளானது. அரசும், அரசு சார்ந்த மேல் தட்டு சமூகமும் அதிருப்தி தெரிவித்தது. மேல் தட்டு வர்க்கத்தின் அதிருப்திக்குப் பயந்த ஃபிராய்ட், உடனே தனது நிலையிலிருந்து பின் வாங்கினார். சட்டென்று தனது புதிய கோட்பாட்டை முன் வைத்தார். அதன்படி, உளவியலின் அடிப்படை காமமே என்று அறிவித்தார். ’கால் பந்தாட்டத்தில் இரண்டு கம்பங்களுக்கு நடுவில் பந்தை உதைத்து கோல் போடுவதாக இருந்தாலும் சரி, தலைவன் மேல் தொண்டன் செலுத்தும் வீர வழிபாடாக இருந்தாலும் சரி எல்லாமே காம விழைவின் வெளிபாடே’ என்றார் ஃபிராய்ட்.

ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அதன் காம உணர்வுகள் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கின்றன என்பது அவரது வாதம். ஒரு குழந்தை தன் தாயின் மார்புக்காம்புகளைச் சுவைப்பது, தனது பிறப்புறுப்பைத் தொட்டுப் பார்த்தல், மல ஜலம் கழித்தல் போன்ற அனுபவங் களில் சுகம் அனுபவிக்கிறது. இந்த இன்பங்கள் காம அனுபவத்தின் ஆரம்ப நிலைகளே என்கிறார் ஃபிராய்ட்.

ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மாபகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (Oedipus complex) என்று அழைக்கிறார்.

அத்துடன் மனநோய் அல்லது நரம்பு கோளாறுகளை உருவாக்குவதில் அடக்கி ஒடுக்கப்பட்ட பாலுணர்ச்சி பெரும்பங்காற்றுகிறது எனும் கொள்கையை வலியுறுத்தினார் ஃப்ராய்ட். பாலுணர்ச் சியும், சிற்றின்ப வேட்கையும் பதின்ம பருவத்தில் அல்ல குழந்தைப் பருவத்தின் தொடக்கத்தி லேயே தோன்றி விடுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த கருத்துகள் இன்னும் விவாதத்திற்குரியதாக இருந்தாலும் அவருக்கு உளவியல் உலகில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் Super ego, Ego, Id ஆகிய மூன்று ஆதிக்கங்கள் மனத்தை இயக்குகின்றன என்றும், அவற்றை மூளையின் மூன்று பிரிவுகளாக கொள்ளலாம் என்றும் ஃப்ராய்ட் கூறினார். வாழ்க்கை யில் நடக்கும் கொடூரமான நிகழ்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்கள் ஆகியவை Id-இல் பதிவா கின்றன. Super ego, Ego ஆகியவற்றின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் சராசரியாக வாழ்கிறான். Id-இன் ஆதிக்கம் மேலோங்கும் போது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தன்னையறியாமல் தாக்கத் தொடங்கி விடுகிறான். அதனால் நோயாளியின் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டு Id-இல் பதிந்த கொடூர நிகழ்ச்சிகளை தத்துவ முறையில் அழித்து விட்டால் மனநோயை குணப்படுத்தி விடமுடியும் என்பதுதான் ஃப்ராய்டின் தத்துவம்.

பின்னாளில் ஃப்ராய்டுக்கு தாடை எலும்பில் புற்றுநோய் ஏற்பட்டு முப்பது அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த நோய் தந்த வேதனைகளுக்கிடையிலும் அவர் கடுமை யாக உழைத்தார். அந்தக்கால கட்டத்தில் ஹிட்லரின் நாசிப் படைகள் ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தன. அப்போது 82 வயதை எட்டியிருந்த நிலையிலும் ஃப்ராய்ட் ஒரு யூதராக இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறிடுமாறு நண்பர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து தன் மனைவி, மகளுடன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். 15 மாதங்களுக்கு பிறகு 1939-ஆம் ஆண்டு இதே செப்டம்பரி தமது 83-ஆவது வயதில் அவர் காலமானார்.

மனம் என்பது புரியாத புதிராக இருந்த காலகட்டத்தில் அந்த புரியாத மனக் கதவினை திறந்ததால்தான் ‘உளவியலின் தந்தை’ என்று போற்றப்படுகிறார் ஃப்ராய்ட்.