18 வயதிற்குட்ட மைனர் பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரமே: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! – AanthaiReporter.Com

18 வயதிற்குட்ட மைனர் பெண்ணை மணந்து உறவு கொண்டால் அது பலாத்காரமே: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தேசிய ஆவண காப்பக புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் 2 லட்சத்து 15,212 பெண்கள் திருமண வயது வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துள்ளதாகவும் இதேபோன்று ஒரு லட்சத்து 64,763 ஆண்களும் குழந்தை திருமணம் செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது நினைவிருக்கும். அது மட்டுமின்றி உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது  என்றும் முன்னரே யூனிசெப் தெரிவித்திருந்தது. அத்துடன் இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்றும் தெரிவித்துடன் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கும்.

இதற்கிடையில் நம் இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 375-ல் சர்ச்சைக்குரிய உட்பிரிவு 2- ஆனது, ஒரு ஆண் தனது மனைவிக்கு 15-வயது ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ (POCSO) 18 வயது கீழ் உள்ள அனைவரையும் குழந்தைகள் எனக் குறிப்பிடுகிறது.

அப்படி இருக்கும்போது சட்டப்பிரிவு ஐபிசி 375 (2) 15 வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் ஒரு கணவர் உறவு கொள்வதை அனுமதித்தால் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் மைனர்களுக்கு சட்டத்தில் சமத்துவம் அளிக்காத நிலையை உருவாக்கும் என்றும் ‘இண்டிபெண்டன்ட் தாட்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவரது கணவரே பாலுறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று ‘இண்டிபெண்டன்ட் தாட்’ தொண்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை, விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து, மனைவி மைனர் பெண்ணாக அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் ஓராண்டுக்குள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் மனைவி மைனராக இருந்தால் அவருடன் கணவர் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகது என சட்டத்தில் ஒரு விதிவிலக்கை அரசு ஏற்படுத்தியது ஏன் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வினவினர். மேலும், பிற விவகாரங்களில் முடிவெடுக்க 18-வயதே சரியான வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கணவருடன் பாலுறவு கொள்வதில் மட்டும் ஏன் இத்தகைய விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் வினவினர். நாட்டில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டங்கள் இருந்தும் அத்தகைய திருமணங்கள் நடந்து கொண்டி ருப்பது வேதனை அளிக்கிறது. 70 ஆண்டுகளாகியும் சட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்த முடியாதது வருத்தத்துக்குரியது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.