ரஜினியின் வீட்டம்மா நடத்தி வந்த ‘ஆஸ்ரம்’ ஸ்கூலுக்கு பூட்டு!

ரஜினியின் வீட்டம்மா நடத்தி வந்த ‘ஆஸ்ரம்’ ஸ்கூலுக்கு பூட்டு!

சென்னை கிண்டியில் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த அந்த இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள், வேளச்சேரியில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  இட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு கூறும்போது, ‘‘கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பள்ளியின் இடத்துக்கு வாடகை கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் ரூ.10 கோடி வாடகை தொகையாக தர வேண்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது ரூ.2 கோடி தருவதாக நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். அந்தத் தொகையை தருவதிலும் இழுத்தடித்தனர். அதனால் பள்ளிக்கு பூட்டு போடும் சூழ்நிலை உருவானது’’ என்றார்.

அதே சமயம் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நில உரிமையாளரின் குடும்பத் தகராறு காரணமாக பல தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல, இது ஒரு சுரண்டல். காரணமில்லாமலும், முறையற்ற நிலையிலும் வாடகைத் தொகையை அதிகரித்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே ஆலோசித்து, அந்த இடத்தை காலி செய்ய முடிவெடுத்துள்ளோம். மேலும் இப்பிரச்சினையை முடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஊடகங்களைப் பயன்படுத்தி இடத்தின் உரிமையாளர் தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தையும், மாணவர்களையும், பெற்றோரையும் நிலத்தின் உரிமையாளர் துன்புறுத்தியதாகவும் ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்த நில உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!