வங்கிகளின் வருடாந்திர அறிக்கையை ஆர் டி ஐ மூலம் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு! – AanthaiReporter.Com

வங்கிகளின் வருடாந்திர அறிக்கையை ஆர் டி ஐ மூலம் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

கடந்த, ஒரு வருட காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்து உள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 விழுக்காடு அதிகம். இதனிடையே நம் நாட்டில் உள்ள வங்கிகளின் வருடாந்திர ஆய்வு அறிக்கை தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில், இந்த தகவலை வெளியிட வேண்டியது சட்டப்படியான கடமை என்பதை ரிசர்வ் வங்கிக்கு கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.

அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் ரத்தான 7 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனில், 80% வாராக் கடன் நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் ரத்தாகியுள்ளன. வங்கிகளில் பல கோடி ரூபாய் பணத்தை கடனான பெற்றுவிட்டு, அதனை திரும்பச் செலுத்தாத பலர் உள்ளனர். இதனால் வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கே தலைவலியாக மாறியுள்ளது. வாராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி பல அதிரடி நடவடிக்கை களை எடுக்கவில்லை என்ற புகாரும் உள்ளது. ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அமைப்பை மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், வாராக்கடன் தொகையைக் குறைத்து காட்டுவதற்காக வங்கிகள் பல கோடி ரூபாய் வாராக்கடனை ரத்து செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 7 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் ரத்து செய்துள்ளதாகவும் இதில், 80% வாராக்கடனை கடந்த 5 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்தான் பல்வேறு தகவல்களை தர மறுக்கும் ரிசர்வ் வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்டிஐ செயல்வீரர் எஸ்.சி. அகர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது.

கேட்கப்படும் தகவல் குறித்து சட்டத்தில் விதிவிலக்கு அளித்திருந்தால் தவிர, மற்றபடி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் கேட்போருக்கு தகவல் தர ஆர்பிஐ மறுக்க முடியாது என ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டும், மத்திய தகவல் ஆணையமும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்திருக்கின்றன. அந்த வகை யில் வங்கிகளின் ஆண்டு ஆய்வு அறிக்கை பற்றிய தகவல்களை, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தர மறுத்த ரிசர்வ் வங்கிக்கு, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, ஏற்கெனவே கடந்த ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.ஆனால் அவமதிப்பு நோட்டீஸ் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காத சுப்ரீம் கோர்ட், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் களை அளிப்பதற்கு கடைசி வாய்ப்பு அளிப்பதாக ரிசர்வ் வங்கியிடம் தெளிவுபடுத்தியது. இதற்கு மேலும் விவரங்களை வெளியிட மறுத்தால் அது கடுமையாகக் கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்தாத நிறுவனங்களுக்கு வாராக் கடன் பட்டியலில் சேர்ப்பதற்கு கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வருகிறது. இது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் வாராக் கடன் செலுத்தாத நிறுவனங்கள் மீது, 180 நாள் கால அவகாசம் முடிந்த பிறகு 34 மின் திட்டங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த திவால் நடவடிக்கையை எதிர்த்து 70 நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதில் மின்துறை, கப்பல் போக்குவரத்து, ஜவுளித்துறை நிறுவனங்கள் அடங்கும்.

இதனை அடுத்து, ரிசர்வ் வங்கி பிறப்பித்த அறிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்தது. இதனால் வாராக் கடன் வசூலில் தொய்வு நிலை ஏற்பட்டது. இதனிடையே புதிய விதிகளை வகுக்கும் முனைப்பில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங் களுக்கு அதை செலுத்துவதற்கு கூடுதலாக 60 நாள் அவகாசம் அளிப்பதற்கான புதிய விதி முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றதாக அறிவித்தது.

நிறுவனங்கள் கடன் பெற்று அதனை, 90 நாட்களுக்குள் செலுத்தாவிடில் அது வாராக் கடனாகக் கருதப்படும். இதன் பிறகு நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்த 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் அதற்குள் நடவடிக்கை எடுக்காவிடில் என்சிஎல்டி-க்கு பரிந்துரைக்கப்படும். ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 90 நாட்களாக உள்ள அவகாச காலத்தை, கூடுதலாக 30 முதல் 60 நாட்கள் வரை நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது போல் கூடுதல் அவகாசம் அளிப்பதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப் படுகிறது.