மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மும்பை :ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!

இந்திய பங்குச் சந்தையின் தலைமையகமான மும்பையில் உள்ள ஆரே காலனி பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிறை யிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் கொலபா – பாந்திரா – சாந்தாகுரூஸ் இடையே 3ஆவது மெட்ரோ வழித்தடம் அமைகிறது. இதையொட்டி, மும்பை நகரின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரே காலனி((Aarey Colony)) பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சுமார் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் பணியை, மெட்ரோ நிர்வாகம், வேகவேகமாக மேற்கொண்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, மும்பை சட்டக் கல்லூரி மாணவர்கள் குழு கடிதம் அனுப்பியது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்து நீதிபதிகள் அருண்மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது.

அந்த விசாரணையின் போது மும்பை ஆரே காலனி பகுதி, பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலமா? இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஒருவேளை அது பாதுகாக்கப்பட்ட சூழல் மண்டலமாக இருப்பின், அங்கு ஏன் மரங்களை வெட்ட வேண்டியம் அவசியம் ஏற்பட்டது என நீதி பதி கேள்வி எழுப்பினார். அத்துடன் இதுவரை வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டாய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளை நடும் பணி குறித்த நிலை அறிக்கையை தாக்க செய்யவும் உத்தரவிட்டனர். அப்போது, மகாராஷ்டிரா அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா((Tushar Mehta)), மும்பை ஆரே காலனி பகுதியில் இனி மரங்கள் வெட்டப்படாது என்றார்.

இதையடுத்து, ஆரே காலனி பகுதியில், மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர். வழக்கில், மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தை ஒரு வாதியாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிறையிலடைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்கவும் ஆணையிட்டு வழக்கின் விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!