ஜெ. மரண மர்மம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

ஜெ. மரண மர்மம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

கடந்த ஒன்றரை வருஷத்துக்கும் மேலாக நடந்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை தொடர்ந்து நடத்த இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று (ஏப்ரல் 26) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் 90 சதவிகித விசாரணையை முடித்துள்ள நிலையில், ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்த பிறகே அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் இதனை ஐகோர்ட்  தள்ளுபடி செய்துவிட்டது.இதனை எதிர்த்து அப்போலோ தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “ஆணையத்தில் தங்களின் தரவுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், 21 மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. இவ் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அப்போது, அப்போலோ தரப்பிலிருந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “எங்கள் மருத்துவமனை மருத்துவர்களின் பதிலை ஆணையத்தின் உறுப்பினர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் சிறப்பு மருத்துவர்களை நிபுணர் குழுவாக அமைத்து, அவர்கள் அப்போலோ மருத்துவர்களை விசாரிக்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும் ஆணையத்தின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையையும், அப்போலோ மருத்துவர்களை ஏன் சிறப்பு நிபுணர் குழு அமைத்து விசாரிக்கக் கூடாது என்பதற்கான விரிவான பதிலையும் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்த 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

முன்னதாக ஜெயலலிதா மரணம் மர்மம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப் பட்டதையடுத்து, அதனை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த ஆணையம் சசிகலா உறவினர்கள், அப்போலோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பல தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆணையத்தின் அனைத்து விசாரணைகளும் அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts

error: Content is protected !!