கிரிமினல் எம்.பி.க்கள் & எம்.எல்.ஏ.க்கள் – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு! – AanthaiReporter.Com

கிரிமினல் எம்.பி.க்கள் & எம்.எல்.ஏ.க்கள் – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப் பட வேண்டும் என்றும், அத்தகைய கட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ள நிலையில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பட்டியலை சமர்ப்பிக்கும்படி மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கள் மற்றும் ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப் பட்டுள்ளதா என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிக்கு தலைமை தாங்குவதை தடுக்கக் கோரி, பா.ஜ.க, வழக்கறிஞர், அஷ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக ஊழல் புகார் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட போதும், அவர்கள், கட்சிகளில் தலைமை பொறுப்பு வகிப்பதை தன் மனுவில் அஷ்வினி குமார் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை 12 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்து ரைத்தது. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இந்த சிறப்பு நீதிமன்றங்கள் இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்களின் விவரங்களை தாக்கல் செய்யவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

இது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டி பதிலளித்த மத்திய அரசு இதுவரை 11 மாநில அரசுகள் மட்டும் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்களின் பட்டியல் மற்றும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்தது.

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கையில் 249 வழக்குகளுடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து 233 வழக்குகளுடன் கேரளா இரண்டாம் இடத்தையும் 226 வழக்குகளுடன் மேற்கு வங்கம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மொத்தம் வழக்குகளில் 1233 வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதி 1097 வழக்குகள் 11 மாநிலங்களில் நிலுவையில் உள்ளன என மத்திய அரசு தெரிவித்தது.

அதை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்கும்படி மாநில அரசுகளின் தலைமை செயலாளர் கள் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.