ஆதார் -க்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு – AanthaiReporter.Com

ஆதார் -க்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அரசின் மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி உத்தரவிட்டது.

பின்னர் இந்த கட்டுப்பாட்டை தளர்த்திய சுப்ரீம் கோர்ட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், அனைத்து ஓய்வூதிய திட்டங்கள், வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட வற்றுக்கு தானாக ஆதார் எண் தருவோரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என 2015, அக்டோபர் 15-ந்தேதி அறிவித்தது.அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை மேற்படி திட்டங்களுக்கு ஆதார் எண் வெறும் சம்மதத்தின் பேரில் பெற வேண்டுமேயன்றி, கட்டாயமாக்கி பெறக் கூடாது என்றும் அறிவித்தது.

இந்த நிலையில் ஆதார் அட்டை கட்டாயத்துக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கில், இடைக்கால தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கு சமூக நலத்திட்டங்கள் தொடர்வதில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது. ஆதார் விவகாரத்தில் தடையோ, எந்த உத்தரவோ பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து மனுக்களும் ஜூலை 7-ல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.சமூக நலத் திட்டங்களில் முறைகேடுகளைத் தவிர்க்கவே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், 95 சதவீதம் பேர் ஆதார் எண்ணை அரசின் நலத் திட்டங்களில் பதிவு செய்துவிட்டதால் ஆதார் எண்ணை பதிவுசெய்யும் கால அவகாசத்தை செப்டம்பர் 30-க்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.