நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைக்கலாம் !- சுப்ரீம் கோர்ட் அனுமதி

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைக்கலாம் !- சுப்ரீம் கோர்ட் அனுமதி

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன. பா.ம.க தொடர்ந்த வழக்கில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. இதனால், இந்தத் தடை நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது. இதனால், வேறு வழியின்றி நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் பல அகற்றப்பட்டன. இதனால் அரசின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதனிடையே மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட, ஊராட்சி சாலைகளாக மாற்றி மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குளறுபடி செய்து மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வருகிறது என குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை கேட்டு பெற உள்ளதாகவும் இதனால் கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வருகிற 20-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை பெற்று, உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டது.

மேலும், அதுவரை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை உத்தரவு பிறப்பித்தது. 20-ம் தேதிக்குள் விளக்கத்தை கேட்டு தெரிவிக்காத பட்சத்தில் வழக்கின் அடிப்படை முகந்தரத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அமர்வு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (ஜனவரி 15) சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நகராட்சி, மாநகராட்சி வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைக்கலாம்” என்று தளர்வு அளித்து உத்தரவிட்டுள்ளனர். ஊராட்சிப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நகராட்சி, மாநகராட்சிகளுக்குப் பொருந்தாது என்றும், சண்டிகருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும் என்றும் அதில் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சண்டிகரைச் சேர்ந்த என்.ஜி.ஓ நிறுவனம், “மாநில அரசுகள் மதுபானக் கடைகளைத் திறப்பதற்காக நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றுகின்றன. இதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றுவதில் தவறில்லை” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!