பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்! – AanthaiReporter.Com

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலக விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கு மாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், முரசொலி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சென்னை சாஸ்திரி பவனில் விசாரணை நடைபெறும் என்றும், அதற்குத் தேவையான ஆவணங்கள், கோப்புகள், தொடர்பான அறிக்கைகளுடன் ஆஜராகுமாறு  நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை நடத்துவார் என்றும், புகார்தாரரும் விசாரணையின்போது அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடியில் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தைப் பார்த்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்கு அடுத்தநாள் திரைப்படத்தில் நடித்த நடிகர் தனுஷையும் பஞ்சமி நிலத்தை மையப்படுத்தி திரைப்படம் எடுத்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனையும் பாராட்டி ட்வீட் செய்தார்.

ஸ்டாலினின் இந்த ட்வீட்டுக்கு, ”முரசொலி அலுவலகக் கட்டடமே பஞ்சமி நிலத்தில்தான் இருக்கிறது. முதலில் அதை ஒப்படையுங்கள்” எனப் பதில் ட்வீட் செய்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அப்போது தொடங்கிய சர்ச்சை ஸ்டாலினுக்கும் ராமதாஸுக்கும் இடையே கருத்துப் போராக வெடித்தது குறிப்பிடத்தக்கது.