இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் யார் தெரியுமோ? – AanthaiReporter.Com

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் யார் தெரியுமோ?

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice of SC) ரஞ்சன் கோகாய் நியமிகப்படக்கூடும் என்று உறுதி செய்யப்படாத செய்திகள் கசிந்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் அவர் இன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராகக் கலகக் கொடி உயர்த்தியவர் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு, தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு வேண்டியவர் என்ற எண்ணத்தில், மோதி எதிர்ப்பாளர்கள் இந்தக் கிசுகிசுவை வரவேற்றுப் பதிவிட்டிருந்தார்கள்.

உண்மையில் யார் இந்த ரஞ்சன் கோகாய் ?

எர்ணாகுளம் -ஷோரனூர் பாசஞ்சர் ரயிலில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனிப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் 23 வயது செளமியா. கொச்சியில் ஒரு ஷாப்பிங் மாலில் பணி புரிந்து கொண்டிருந்தவர் அவர். கோவிந்தசாமி என்ற ஒரு மிருகம் அந்த ஆளில்லாத பெட்டியில் நுழைந்தது, மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து செளமியாவை வெளியே தள்ளியது. கீழே விழுந்தவளை அள்ளிக் கொண்டு புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றது. அங்கே அவளை வன்புணர்வு செய்தது. காயங்களுக்காக திஸ்ஸுர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப் பட்ட செளமியா அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வழக்கை விசாரித்த கீழமை நீதி மன்றம் கோவிந்த சாமிக்கு இபிகோ 302ன் படி ( கொலை செய்தமைக்காக) மரணதண்டனை விதித்தது. உயர் நீதி மன்றம் அதை உறுதி செய்தது. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அஙகு ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட மூவர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. கோவிந்தசாமியின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது. அவருக்கு வன்புணர்வு, மற்றும் காயங்களுக்காக இபிகோ 376ன் கீழ ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அதற்கான விளக்கம்: கொலை செய்யும் நோக்கத்துடனோ, அல்லது தனது செயல் மரணத்தை ஏற்படுத்தும் என்று அறிந்தே அதைச் செய்தாலோதான் இபிகோ 302 கீழ் தண்டனை அளிக்க முடியும். ஆனால் கோவிந்தசாமி செளமியாவை மல்லாக்கப்படுக்க வைத்தது ( Supine position) பாலியல் வன்புணர்விற்காகவேயன்றி கொலை செய்யும் நோக்கில் அல்ல. (அதை தான் கேள்விப் பட்டதாக ஒருவர் சாட்சியம் அளித்திருந்தார்) எனவே இபிகோ 302 இதற்குப் பொருந்தாது என்று மாட்சிமை தாங்கிய கனம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை ஊடகங்கள் கடுமையாகச் சாடின. பெண்ணியலாளர்கள் கொதித்தெழுந்தார்கள். பினராயி விஜயன், அச்சுதானந்தன் போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தார்கள்.  முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது வலைப்பூவில் விமர்சித்தார். “சட்டக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்குக் கூட செவிவழி கேள்விப்பட்டதை சாட்சியமாக ஏற்கக் கூடாது என்று தெரியும்” என்று எழுதினார்.

அந்த வலைப்பூ பதிவின் அடிப்படையில் கட்ஜு மீது நீதிமன்ற அவமதிப்பு என நோட்டிஸ் அனுப்பப்பட்டது. கட்ஜு மன்னிப்புக் கோரினார்

இதெல்லாம் நடந்து நெடுங்காலமாகவில்லை. செள்மியா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது 2016 செப்டம்பரில். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு

ஆனால் ரஞ்சன் கோகாய் பற்றிக் கசிந்திருக்கும் (அறிவிப்புக் கூட வரவில்லை) செய்திக்கு நம் அறிவுஜீவிகள் குதூகலித்துப் பதிவு எழுதுகிறார்கள்.

மோதி வெறுப்பு அவரை எதிர்க்கும் எல்லோரையும் புனிதர்களாக ஆக்கிவிடும் போலிருக்கிறது!

மாலன் நாராயணன்