காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு! – AanthaiReporter.Com

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு!

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு, மேலும் அவகாசம் கேட்டது. அத்துடன் தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் திறந்து விட நீதிமன்றம் உத்தர விட்டதை சுட்டிக்காட்டி. 4டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தால் நீர் தர முடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்ற உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதாவது காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டது.ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்காமல் 6 வார காலம் மவுனம் காத்தது. இதனால் தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தர‌வை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மே 3-ம் தேதிக்குள் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (மே 3) மூன்றாவது வழக்காக இன்று காலை 10.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணமாக கர்நாடக தேர்தலையும், பிரதமரின் பிரசாரப் பயணத்தையும் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சர வையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று கூறி கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், இதில் அரசியல் காரணம் உள்ளதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. மேலும், மத்திய அரசு கூறும் காரணங்களை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுவரை மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

அதேசமயம், தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர். பின்னர் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

அடிசினல் ரிப்போர்ட்:

?தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் நஹி என கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்லிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சித்தராமையா கருத்து தெரிவிச்சிருக்கார். தீர்ப்பு பற்றி கர்நாடக அரசு வழக்கறிஞர் உடன் விவாதிப்பேன் என்றும் கூறி யிருக்கார்