வரதட்சணைக் கொடுமை ; சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

வரதட்சணைக் கொடுமை ; சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. நம் நாட்டில் 2017ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 11233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு 498ஏ கீழ் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், குடும்ப வன்முறைத் தடுப்பு சட்டப் பிரிவு 498Aயைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, எந்தவொரு நபரையும் ஆரம்ப விசாரணையின்றி கைது செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்து இருந்தது. வரதட்சணைக் கொடுமை புகாரில் நிறைய பொய் வழக்குகள் போடப்படுவதாலும், திருமண பந்தம் இந்தப் புகாரினால் சிதைவதாகவும் கூறிய நீதிபதிகள், நீதிபதியின் உத்தரவு இல்லாமல் கைது செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் வகையில் தான் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், இதை மாற்ற வேண்டும் என்று பல்வேறு மாதர் சங்கங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 14) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி விட்டனர். வரதட்சணைக் கொடுமை எனக் கூறி ஒரு பெண் அவரது குடும்பத்தினருக்கு எதிராகப் புகார் அளித்த பிறகு, கணவர் மற்றும் அவரது உறவினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.

மேலும் புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி கள், புகாரில் சம்பந்தப் பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்தும் சம்பந்தப்பட்ட நீதி மன்றம் முடிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.

Related Posts

error: Content is protected !!