எஸ் பி ஐ -யின் ஏ. டி. எம்.களில் இருந்து டெய்லி பணம் எடுக்கக் கட்டுப்பாடு! – AanthaiReporter.Com

எஸ் பி ஐ -யின் ஏ. டி. எம்.களில் இருந்து டெய்லி பணம் எடுக்கக் கட்டுப்பாடு!

நம் நாட்டில் உள்ள பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் சில இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 37 கோடியாக அதிகரித்து இருக்கிறது. தற்போதைக்கு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  தனது வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் என்னும் குறைந்த பட்ச இருப்புத் தொகை யை கணக்கில் வைத்திருக்க வேண்டும் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டு பலரின் அதிருப்திக்கு ஆளான எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து நாள் ஒன்றுக்கு எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் ஏடிஎம் மோசடிகளை தடுக்கவும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

சமீப காலமாக ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங் கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது போல் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் சில ரோமானிய நாட்டினர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 2 ரோமானியர் கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோசடி கும்பலிடம் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களைக் காப்பாற்றுவது குறித்து வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தன் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் படி எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் உச்ச வரம்பு 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்திருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

‘‘பாரத ஸ்டேட் வங்கியின் இந்த புதிய விதிமுறை மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நடவடிக்கை மூலம் ஏடிஎம் மோசடிகள் குறையுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்’’ என்று பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக தலைவர் பி.கே. குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.