ஸ்டேட் பேங்க்-கின் நெட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை! – AanthaiReporter.Com

ஸ்டேட் பேங்க்-கின் நெட் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, நெட்பேங்கிங் வசதியை பெற செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. டிசம்பர்-1 ம் தேதிக்குள் எண்ணை இணைக்கவில்லை என்றால், நெட்பேங்கிங் வசதி முடக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில். நீங்கள் எஸ்பிஐ இண்டர்நெட் பேங்க் வாடிக்கையாளராக இருந்தால், டிசம்பர் 1-ம் தேதிக்குள் உங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்யவும். இல்லையெனில் டிசம்பர் 1-ம் தேதிக்கு பின்னர் நீங்கள் உங்களின் நெட்பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது. வங்கிக் கிளைகளின் வழியாக செல்போன் எண்ணை பதிவு செய்யவும் என்றும் ஆன்லைன் எஸ்பிஐ தளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் திரும்பவும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

ஏற்கெனவே செல்போன் எண்ணை பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் சேவையை தொடரமுடியும். வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று, அங்கு அளிக்கப்படும் படிவத்தில் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து அளிக்கவும் என்று வலியுறுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், மின்னணு வங்கி சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது இமெயில் வழியாகவோ தகவல் அனுப்புவதற்கு ஏற்ப, அவர்களின் தொடர்பு விவரங்களை பதிவு செய்வதை வங்கிகளுக்கு கட்டாயமாக்கியது.

மின்னணு வங்கிச் சேவைகளில் இண்டெர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளும் அடங்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தலுக்கு பின்னர் வங்கிகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் வசதியில், வாடிக்கையாளர் விவரங்களில் தங்களது செல்போன் எண் பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.