சவரக்கத்தி சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

சவரக்கத்தி சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

மிஷ்கின் திரைக்கதை எழுதி, தயாரித்து அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் சவரக்கத்தி. ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் பிளாக் ஹியூமர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா, இயக்குநர் ஆதித்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் பேசிய இயக்குநர் ஆதித்யா ரொம்ப சிம்பிளாக ‘மிக்க நன்றி’ என்ற ரெஞ்சில் பேசி விட்டு அமர்ந்து விட்ட நிலையில் பேச வந்த பூர்ணா, “எல்லாருக்கும் நன்றி. இந்தப் படம் நல்லா இருக்குமா, அத மக்கள் ஏத்துப்பாங்களானு எல்லாருக்கும் சந்தேகம் இருந்துச்சி. ஆனா நீங்க மீடியா எழுதுன விமர்சனம்தான் மக்களை இந்தப் படத்தைப் பார்க்கக் கொண்டுவந்துருக்கு. என் சினிமா வாழ்க்கையில் எனக்குத் தெரிஞ்சி என்னுடைய பெஸ்ட் படம், எவ்வளவு நாள் நான் வைட் பண்ண ஒரு நாள் இது. அதுக்கு நான் மிஷ்கின் சார்க்கு தான் தாங்க்ஸ் சொல்லணும். நான் மிஷ்கின் சார் கிட்ட நிறைய கத்துகிட்டேன். ஆக்டிங் நான் யார்கிட்டையும், ஸ்கூல் போயும் கத்துக்கல. ஆனா எனக்கு இதுதான் ஆக்டிங், இப்படித்தான் பண்ணனும், இதுதான் சினிமானு எனக்குச் சொல்லி கொடுத்தது சவரகத்தி. 25 நாட்கள் நான் சவரகத்தி படத்துலேயே வாழ்ந்தேன். என் உண்மையான வாழ்க்கைக்கு வர எனக்கு ரொம்ப நாள் ஆனது”என்று நெகிழ்சியுடன் கைகூப்பி விட்டு அமர்ந்தார்.

இதையடுத்து பேசிய நடிகர் & இயக்குநர் ராம், “இந்த மாதிரி எளிமையான படங்கள் இந்தப் படம்னு கிடையாது,பராசக்தியில தொடங்கி தமிழில் எடுக்கப்பட்ட மாறுபட்ட படங்கள் அனைத்தையும் மக்கள் ஆதரிச்சிருக்காங்க. அந்த ஆதரவைத்தான் மக்கள் சவரக்கத்திக்கும் கொடுத்துருக்காங்க. சமீப காலமாகத் தியேட்டருக்கு வருகிற கூட்டம் 30% குறைஞ்சிருக்குனு சொல்றாங்க. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என தியேட்டர்கள் அதிபர்கள் சொல்கின்றனர். பெரிய படம் வரவேண்டும் என்கின்றனர். காலா போன்ற படம் வந்தால் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்கிறார்கள்.

தற்போது சவரக்கத்தி படத்திற்கும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மிஷ்கின் படம் காமெடிப் படமாக இருக்கும்னு யாரும் எதிர்பார்க்கவே இல்ல. யு சர்டிபிகேட் கொடுத்தப்புறம்கூட யாரும் அத நம்பல. மிஷ்கினுடைய பெஸ்ட் ஸ்கிரிப்ட் சவரகத்தின்னு நான் சொல்லுவேன். பார்க்கத்தான் மிஷ்கின் பெரிய பயில்வான் மாதிரி இருப்பார். ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரியானவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கதை எழுதி வரும் மிஷ்கின் அதில் ரொம்பவே தேர்ந்திருக்கிறார். இந்த படத்திற்கு யு சர்ட்டிபிகேட் கிடைத்திருந்தாலும் சவரக்கத்தி என்ற தலைப்பால் இது வன்முறை நிறைந்த படமாக இருக்குமோ? என்று சிலர் நினைக்கின்றனர்.இந்த சவரக்கத்தி திருத்தும் கத்தி. அழகு பூர்வமான கத்தி .. . அதே போல் பூர்ணா இனிமேலும் நல்ல நல்ல படங்களில் நடிப்பாங்கனு எதிர்பார்க்குறேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மிஷ்கின் பேசும்போது, “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதிகமாக தமிழ் சினிமாவில் விமர்சனத்திற்குள்ளான ஒருவன் நான். அதற்கு நானும் காரணம். என் மேல் எவ்வளவு தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அதை என் ஊடக நண்பர்கள் தோள்கொடுத்துக் கொண்டாடி, மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்கள். உண்மையா சொல்றேன், எனக்கு இந்தப்படம் வந்து எந்த லாபமும் குடுக்கல. ரொம்ப சின்சியரா சொல்றேன், இந்தப் படத்தை நான் எந்த லாபத்திற்கும் பண்ணல. இந்தப் படத்தை நான் லாபத்திற்குப் பண்ணியிருந்தா என் தம்பிகிட்ட சொல்லி ஒரு குத்துப்பாட்டைச் சொருகி ஆடியன்ஸை உள்ள இழுத்திருக்க முடியும். நெறைய பேரு சொன்னாங்க, கிளைமாக்ஸ் பக்கத்துல இருக்கும்போது சோகப்பாட்டைப் போடதீங்கனு. நான் சொன்னேன், அது சோகமான பாட்டு இல்ல, அந்தப் பிச்சை என்கிற கதாபாத்திரம் வாழ்க்கையில் அவன் மாறி இருக்கும்போது அந்தத் தருணத்தில் வருகிற தாலாட்டு என்று சொன்னபோது நம்பவில்லை. மக்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

“என் வாழ்க்கையில் சினிமா தவிர வேற ஏதும் இல்லை. அத நீங்க என் படங்களில் உணர முடியும். செத்ததுக்கு அப்புறம் சொர்க்கத்திற்குப் போவாங்களா, நரகத்திற்குப் போவங்களானு எனக்குத் தெரியல. ஆனால் எனக்கு ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சது. ஒரு நல்ல படைப்பை நல்ல மனிதர்கள் பார்க்கும்போது அதை முழு மனதோடு பாராட்ட ஆள் இருக்குறாங்க, அதுவே எனக்கு போதும்னு நெனைக்குறேன்.நான் இப்போது சந்தோஷமாக இருப்பதற்கு இன்னொரு காரணம், என் நண்பன் ராம். நான்கூட சில சமயங்களில் நல்லா ட்ரெஸ் பண்ணுவேன். ஆனால் அவன் எப்போதும் ரொம்ப சிம்பிளாக கையில ஒரு சிகரெட் வச்சிக்கிட்டு நிஜ இலக்கியவாதியாக வாழ்ந்துவருகிறான். நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. நிஜமா சொல்றேன், நான் இன்னும்கூட கொஞ்சம் பணம் அவனுக்குக் கொடுக்கணும். வேற நடிகனோ, வேற டெக்னீஷியனோ இருந்தா என் காச கொடுத்தாதான் படத்தை ரீலிஸ் பண்ணணும்னு சொல்லிருப்பாங்க. ஆனா அவனோ அதப் பத்தியெல்லாம் யோசிக்காதீங்கண்ணா, எனக்கு எப்போ தேவைப்படுதோ ஆபீஸ்ல வந்து கேட்குறேன், அப்போ தாங்கன்னு சொன்னான். என் வாழ்க்கையில் மறக்க முடியாதவன் இந்த ராம் ” என்று சொன்னவர் தொடர்ந்து பேசும் போது, ”இந்த 50 நாட்கள் நான் பூர்ணாவுடன் பணியாற்றினேன். அற்புதமான பெண். அவளுக்காக நிறைய கதைகள் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனாக, ஒரு சகோதரனாக ஒரு சிறிய தந்தையாக நான் அவளுடன் இருப்பேன். அவளைப் பத்திரமாக பார்த்துப்பேன். அட்வைஸ் சொல்லுவேன்” என்றார்.

மேலும் “ என் படத்தைப் பற்றிய விமர்சனம் சரிதான். என் படத்தில் நிறைய வன்மம் இருக்கிறது என்று விமர்சனம் வருகிறது. உண்மைதான் அடுத்து இன்னும் வனமான ஒரு படம் எடுக்க ஆயத்தாஅம்கி விட்டேன் அன்பைப் பற்றிச் சொல்லும்போது வன்மத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சினிமாவப் பார்க்கும் போது, ‘இல்ல சார் கலெக்‌ஷன் வரல சார்’ என்பார்களே.. அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. ஏன்னா என்னுடைய சித்திரம் பேசுதடி படம் வந்தப்போ நான் செத்து திரும்பவும் வந்தேன். ஒரே ஒரு தியேட்டர்ல ஓடுச்சி. 40 பெட்டி திரும்ப வந்து ஒரே ஒரு பெட்டி மட்டும் க்ரௌன்ட் தியேட்டர்ல ஓடி, அப்புறம் தேவி தியேட்டருக்கு வந்து அந்தப் படம் வெற்றி பெற்றது. வெற்றி தோல்வினு இல்ல. ஒரே ஒரு படம் எடுத்தாலும் அது நல்ல படமா எடுக்கணும் அவ்ளோதான். நான் அடுத்த படம் நல்ல படம் எடுக்காவிட்டால் அதை நார்நாராகக் கிழித்து எழுதுங்கள். நல்ல படம் எடுத்தால் என்னை மடியில் வைத்துத் தாலாட்டுங்கள்” என்று மனமுவந்து கைகூப்பி சொன்ன இயக்குநர் மிஷ்கின் அங்கு வந்திருந்த ஒவ்வொரு நிருபரின் கையையும் பிடித்து குலுக்கு நன்றி சொன்னார்

error: Content is protected !!