சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு அனுமதி! – AanthaiReporter.Com

சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு அனுமதி!

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் வேலைவாய்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், சவுதி அரேபிய பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அது போல் கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கான விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை முப்பது நாட்களுக்குள் வழங்குமாறு அமைச்சரவைக் குழுவிற்கு சவுதி அரசர் உத்தரவிட்டார். இந்த ஆணை 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதே சமயம் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை அமலில் உள்ளது. திரைப்படங்க ளுக்கும் அனுமதி வழங்கப் படுவதில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தகவல் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலே அலாவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளோம். திரைப்படங்கள் திரையிட உரிமம் வழங்குவது குறித்து ஆடியோ வீடியோ ஊடக ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலனையை தொடங்கியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.