குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க பாரத் யாத்ரா (நேஷ்னல் யாத்ரா)! – AanthaiReporter.Com

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க பாரத் யாத்ரா (நேஷ்னல் யாத்ரா)!

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். நம் நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் அதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை யாத்திரை நடத்தவும் கைலாஷ் சத்யார்த்தி திட்டமிட்டார்.

அதாவது இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக ’பாரத் யாத்ரா’ என்ற பெயரிலான விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது. செப்டமபர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் ஆரம்ப விழாவில் பேசிய கைலாஷ் சத்யார்த்தி, “ நாட்டில் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் மாயமாகிறார்கள். 6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் மாயமாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. குழந்தைகள் உரிமைகளைகாக்கவும், பாதுகாப்பான இந்தியா உருவாகவும் இந்த நெடும்பயணம் உதவி செய்யும்” என்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நீண்ட பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது. வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக இன்று சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜன் அவர்களும், டாக்டர். அன்புமனி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.