சனி கிரகத்தை வலம் வரும் 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைக்கலாம்- வாங்க! – AanthaiReporter.Com

சனி கிரகத்தை வலம் வரும் 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைக்கலாம்- வாங்க!

சுட்டெரிக்கும் சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. சகலரின் வாழ்க்கையோடு பிணைந்த இந்த கோள் சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 29 வருடங்களை எடுத்துக் கொள்கிறது. தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வியாழனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக்கிரகத் திற்குள் சரியாக 763 பூமிகளை அடக்கி விடலாம் என்றாலும், சனியின் எடை, பூமியின் எடையை விட 95 மடங்கு தான் அதிகம். சனி ஒரு வாயுக்கோளம். அதில் கடினமான உட்பகுதி மிகச்சிறியது. அப்படியாப்பட்ட சனி கிரகத்தில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைப்பதற்காக பொதுமக்களுக்கு ஓர் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் ‘கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கள், சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் சனிக்கிரகத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.

சூரிய மண்டலத்தில் ஆறாவதான சனி கிரகத்தை தற்போது மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவு களைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சனி கிரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருட காலமும், சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது. எனினும், அளவில் மிகப்பெரிய கிரகமான வியாழனே இன்னும் மிகப்பெரிய நிலவுகளைக் கொண்டுள்ளது. இது ஜுபிடருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. உதாரணமாக வியாழனின் பெரிய நிலவான Ganymede பூமியின் பாதி அளவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக கண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் ஸ்காட் ஷெப்பர்ட் கூறுகையில்,’இந்தப் புதிய நிலவுகள் ஹவாயில் உள்ள மவுனா கே மலையில் பொருத்தப்பட்டுள்ள சுபரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. சனியின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. சனியை இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும், அவை விரைவில் கண்டுபிடிக்கப்படும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கிகள் சிலவற்றைப் பயன்படுத்தி, மாபெரும் கிரகங்களைச் சுற்றியுள்ள சிறிய நிலவுகளை கண்டுபிடித்து வருகிறோம்’ என்று தெரிவித்துளார்.

அதேசமயம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளுக்கு பெயரிடுவதற்காக பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.