சசிலலிதா என்னும் ஜெயலலிதா! – புத்தம் புது தகவல்களுடன் அதிரடிப்படம்! – AanthaiReporter.Com

சசிலலிதா என்னும் ஜெயலலிதா! – புத்தம் புது தகவல்களுடன் அதிரடிப்படம்!

செத்தும் கொடுப்பார் சீதக்காதி என்ற சொலவழக்குக்கு எம்.ஜி.ஆர். வாழ்க்கை ஒரு காரணியாக இருந்தது. அவர் மறைந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் அவர் பெயரில் பிழைப்பு நடத்துவோரின் எண்ணிக்கைக் குறையவில்லை. அப்பேர்ப்பட்ட எம்ஜிஆரால் அரசியலுக்கு அறிமுகம் செய்து வைக்க ஜெயலலிதாவுக்கும் மேற்படி சொலவழக்கு பொருத்தமாகிக் கொண்டிருக்கிறது. தற்போதையை தமிழக ஆட்சியே ஜெயலலிதா கொண்டு வந்ததுதான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு கோலிவுட், மோலிவுட், டோலிவுட் போன்றவற்றில் ஒரு மிகப் பெரிய இயக்கமே இஅயங்கிக் கொண்டிருக்கிறது. ஆம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘தலைவி’ என்ற பெயரிலும், ஆ.பிரியதர்ஷன் ‘தி அயர்ன் லேடி’என்ற பெயரிலும் திரைப் படமாக இயக்கி வருகின்றனர்.

அதேபோல், இயக்குநர் கவுதம் மேனன், ‘குயின்’ என்ற பெயரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெப் சீரியலாக இயக்கி வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘சசிகலா’ என்ற பெயரில் இயக்குவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே இவர் சந்தன கடத்தல் வீரப்பன், ரத்த சரித்திரம், சர்க்கார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட‌ வாழ்வை அடிப்படையாக கொண்டு ‘லஷ்மி என்டிஆர்’ திரைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில், ராம் கோபால் வர்மா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சசிகலா’ படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், ‘‘இந்த திரைப்படம் சசிகலாவின் வாழ்க்கை, ஜெயலலிதா வுடனான உறவு, இரக்கமற்ற குணம், மன்னார்குடி கூட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. காதல் என்பது ஆபத்தான அரசியல்” என குறிப்பிட்டுள்ளார். விரைவில் வெளியாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான இவர், ‘ஜெயம் மூவிஸ்’ என்ற பெயரில் பல படங்கள் தயாரித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழி களிலும் படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் தயாரித்து இயக்கப் போகும் படத்தின் பெயர் ‘சசி லலிதா’. ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் இப்படத்தில் இருக்கும். இக்கதையை ஜெயலலிதாவின் ஆத்மா கூறியதன் அடிப்படையில் தான் இந்த படம் அமைந்திருக்கும்.

சிறு வயதில் எப்படி இருந்தார்? எப்படி நடிகையாக ஆனார்? அரசியலில் அடியெடுத்து வைத்தது, அதிமுகவில் அவரது பங்களிப்பு, சசிகலாவின் வாழ்க்கை, அவருடன் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட தொடர்பு என்று மக்கள் அறியாத பல விஷயங்களையும் உள்ளடக்கி கதையாக இப்படம் இருக்கும்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதை நிறைவேற்றும் விதமாக இப்படம் இருக்கும்.குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதி 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பது பற்றியும், உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்திருப்பதும், அது பற்றிய முழு விபரத்தையும் உலகிற்கு தெரியப் படுத்தும் விதமாகவும் இப்படம் இருக்கும்.

சிறுவயது முதல் ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்களும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் கூறியது தான் இப்படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டிருப்பதால் நிச்சயம் இப்படம் எல்லோர் இதயத்திலும் நீங்காத இடம்பெறும். இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்”என்று இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜெகதீஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.