(சசிகலா) நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சையில் நடைமுறையில் சர்ச்சை!

(சசிகலா) நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சையில் நடைமுறையில் சர்ச்சை!

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானமாக கொடுத்த இளைஞர் மூளைச்சாவு அடைந்தது குறித்து முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளதால் உறுப்பு தானம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடராஜனுக்கு உறுப்பு தானம் வழங்கினார். 19 வயது கூலி தொழிலாளியான கார்த்திக் கடந்த 30ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சுயநினைவின்றி பின்னர் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே மருத்துவர்களின் அறிவுரை இன்றி கார்த்திக்கை அழைத்து சென்ற உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு இளைஞர் கார்த்திக் மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த முரண்பட்ட தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அதாவது கூலி தொழிலாளியான கார்த்திக்கை சில லட்சங்கள் செலவாகும் ஏர் ஆம்புலன்ஸில் சென்னை கொண்டு வந்தது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.  பணம் செலவழிக்க முடியாததால் தான் கார்த்திக் அறந்தாங்கி, புதுக்கோட்டை என மாறி மாறி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்.  திடீரென அவரை சென்னைக்கு அழைத்து வர எங்கிருந்து பணம் வந்தது. மேலும் தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தான் நடராஜனுக்கு பொருத்தப்படவுள்ளதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் உடல் உறுப்பு தானத்தில் பேரம் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே தானமாக பெறப்பட்ட உடலுறுப்புகளை நடராஜனுக்கு பொருத்த அனுமதி வழங்கியது ஜெயலலிதா கைரேகை சர்ச்சையில் சிக்கிய மருத்துவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!