சாம்சங் டி வி உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்? – AanthaiReporter.Com

சாம்சங் டி வி உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்?

பிரபலமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நன்றாக விற்பனையாகிக் கொண்டி ருக்கும் தனது டிவி உற்பத்தியை விரைவில் நிறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம், அதிக வருவாய் கொண்ட உலகின் மிகப்பெரிய குழுமம் என்ற பெருமை கொண்டது. 1938ஆம் ஆண்டு 40 நபர்களுடன் தொடங்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தில் தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வீட்டு உபயோகப் பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மருத் துவ உபகரணங்கள், கப்பல்கள், கெமிக்கல், ஆட்டோமோடிவ் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பிலும், சேவைத்துறையிலும் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது.

அதிலும்  இந்திய அரசின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தியை மேற்கொண்டுவரும் சாம்சங், இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கை காரணமாகத் தனது டிவி உற்பத்தியை நிறுத்தவுள்ளது. டிவி உற்பத்திக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை இந்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. இதன் விளைவாக, சென்னையில் உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையில் டிவி உற்பத்தியை மேற்கொண்டு வரும் சாம்சங், அங்கு உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள தனது ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் டிவிகளை சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்துவந்தது. இங்கு உற்பத்தியை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வியட்நாம் நாட்டில் உற்பத்தி செய்த டிவிகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொபைல் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தவிருப்பதாலும் டிவி உற்பத்தியை நிறுத்த சாம்சங் முடிவெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாம்சங் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 6.8 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த எண்ணிக்கையை 12 கோடியாக உயர்த்தப்போவதாகச் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்திருந்தது.