இனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ?

இனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ?

“எலே மீரான் எந்த ஊருக்குப் போனாலும்… நம்ம ஊரு செம்மண்ணு உன் குண்டியில ஒட்டிக்கிட்டு தாம்ல இருக்கும். அம்புட்டு பாசக்கார மண்ணு”.நான் பிழைப்பு தேடி கிளம்பும்போது என் அம்மா சொன்ன இந்த வாக்கியம் என் மனசுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

40 ஆண்டுகள்… நாட்டின் பல நகரங்கள், பல மனிதர்கள், பல பழக்க வழக்கங்கள் என வாழ்க்கை துரத்தி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் நான் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே “அண்ணாச்சி நீங்க திருநெல்வேலியா” என்று கேட்டு விடுவார்கள். அதுதான் அம்மா சொன்ன குண்டி மண்.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப் பட்டதிலிருந்தே மனசுக்குள் இனம் புரியாத வலி. எங்கள் ஊர் தென்காசிக்கு அருகில் உள்ள பைம்பொழில். இனி நான் திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ என்கிற கவலையே பெரிதாக இருக்கிறது.

“போங்கண்ணாச்சி நீங்கல்லாம் தென்காசிகாரவுக” என்று ஒதுக்கி விடுவார்களோ… என்று பயமாக இருக்கிறது. இனி நண்பர்களுக்கு திருநெல்வேலி அல்வா வாங்கிக் கொடுத்தால் “அண்ணாச்சி இது தென்காசி அல்வாதானே” என்று சொல்வார்களோ என்ற தயக்கம் வந்திருக்கிறது.

ஏற்கெனவே தூத்துக்குடிகாரர்களும், கன்னியாகுமரிகாரர்களும் இழந்ததை போன்றே நாமும் நெல்லை பெருமையை இழக்கிறோமோ என்று வெறுமையாக இருக்கிறது. அவர்களாவது கடல் தொழில் செய்கிறவர்கள் ‘கடலாடிகள்’ என்ற பெருமையாவது இருக்கிறது. நாங்கள் அப்படி இல்லையே… தாமிரபரணியும், பொதிகை மலையும், குற்றால அருவியும்தானே எங்கள் பெருமை. இப்போது அதையும் பறித்து விட்டதாகவே தோன்றுகிறது.

தனிக்குடித்தனம் பல வசதிகளை கொடுக்கலாம், தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால் ஆன்மாவை அறுத்துப் போட்டு விடுகிறதே…1

மீரான்

Related Posts

error: Content is protected !!