சபரிமலையில் பெண்கள் உரிமை: 620 கீ.மீ.தூரத்துக்கு மனிதச் சங்கிலி! – AanthaiReporter.Com

சபரிமலையில் பெண்கள் உரிமை: 620 கீ.மீ.தூரத்துக்கு மனிதச் சங்கிலி!

சர்ச்சை ஸ்தலமாகி விட்ட சபரி மலையில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காக, வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று மூன்று லட்சத்துக்கும் மேலான பெண்கள் மனித சங்கிலிப் பேரணி யில் ஈடுபடவுள்ளதாக மும்பையைச் சேர்ந்த பெண்கள் சுவர் என்ற குழு தெரிவித்துள்ளது.  ‘பெண் கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை  சுமார் 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தீர்ப்புக்குப் பின்னர் பலமுறை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டாலும், இதுவரை எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களைப் பதினெட்டாம் படியைத் தாண்டவிடவில்லை. சமீபத்தில் தமிழகத்திலிருந்து சென்ற மனிதி என்ற குழுவைச் சேர்ந்த பெண்களையும் திருப்பி அனுப்பினர் கேரள போலீசார். அது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எங்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என தேவசம் போர்டு விளக்கம் தெரிவித்தது.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பெண்கள் சுவர் என்ற குழு சபரிமலையில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காகப் பேரணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கைகோத்து மனித சங்கிலிப் பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

‘அரசியலமைப்பின் கீழ் சமத்துவத்துக்கான எங்கள் உரிமையில் எந்தவொரு தலையீட்டையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சபரிமலை விவகாரத்தில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது’ என்று அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

வரும் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக, இன்று (டிசம்பர் 30) மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு உளது. இந்த நிலையில் இந்தப் பேரணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் நடிகை சுகாசினி, ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்