ரஷ்ய விமானம் தீ பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு! – AanthaiReporter.Com

ரஷ்ய விமானம் தீ பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்  புறப்பட்டு சிறிது நேரத்திலேயே, தொழில் நுட்பக் கோளாறு காரணமாக   அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கி, அதில் பயணித்த 41 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணி யளவில் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் பயணம் செய்தனர்.

ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறங்கி விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருக்கும்போதே திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் தீ வேகமாக பரவத் தொடங்கியதால், விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக ரஷ்ய விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழுவுக்கு பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.