பிரிட்டிஷ் குட்டி இளவரசனின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்! – AanthaiReporter.Com

பிரிட்டிஷ் குட்டி இளவரசனின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்!

ஒட்டு மொத்த உலகையே ஒருகுடை நிழலில் கட்டி ஆண்ட பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையே, மீண்டும் கர்ப்பமாக இருந்த கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

வில்லியம் – கேத் தம்பதி புதிய குட்டி இளவரசருடன் மருத்துவமனைக்கு வெளியே வந்து கை அசைத்தனர். இதையடுத்து சில மணி நேரங்களில் அவர்கள் வீடு திரும்பினர். புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வில்லியம் – கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லூயிஸ் என்பது இளவரசர் வில்லியம்சின் தந்தை வழி உறவினரான லுாயிஸ் மவுண்ட் பேட்டன் பெயரையும், சார்லஸ் என்பது வில்லியம்சின் தந்தை இளவரசர் சார்லசின் பெயரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

ஆர்தர் என்ற பெயர் வில்லியம் – கேத் தம்பதியின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடிசினல் ரிப்போர்ட்:

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க முன்னாள் நடிகை மேகன் மார்க்லே இருவருக்கும் மே 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக தங்கள் நிச்சயதார்த்ததன்ரேஏ, ஹாரி, தன் தாயார் டயானாவை நினைவுகூரும் வண்ணம் அவரது இரு வைரக்கற்கள் பதித்த மோதிரங்களை மேகன்னுக்கு கொடுத்திருந்தார். ஆகவே, திருமணத்தன்றும் கண்டிப்பாக டயானாவின் ஏதாவது ஒரு நகையை மேகன் அணிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஹாரி – மேக்ஹான் மார்க்லே திருமணத்தின்போது, மணமகள் என்ன நகையை அணிந்து கொள்வார் என்று மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பேசிக்கொள்கிறார்கள். டயானாவின் ஸ்பென்ஸர் டியாரா என்னும் கிரீடத்தை மணமகள் சூடிக்கொள்வார் என்று அரச குடும்ப விவகார வல்லுநர் கேட்டி நிக்கோல் கருதுகிறார்.

வேறு சிலரோ தென்கடல் முத்து கம்மல்களை அணிவார் என்கின்றனர். இன்னும் சிலர் ஓமன் சுல்தான், டயானாவுக்கு பரிசாக அளித்த நெக்லஸ், கம்மல்கள், பிரேஸ்லெட் அடங்கிய சபையர் சூட் மற்றும் வைரத்தை மணமகள் தேர்ந்தெடுப்பார் என்று கூறுகின்றனர். அரச குடும்பத்தின் திருமணத்தை குறித்து எதிர்பார்ப்புகள் இருப்பது இயற்கைதானே!