பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ‘ரித்விகா’ – AanthaiReporter.Com

பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் ‘ரித்விகா’

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில்  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி Bigg Boss. ஒரு வீட்டில்16 போட்டியாளர்களை களமிறக்கி, வீடு முழுவதும் கேமராக்களை வைத்து, நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பொதுமக்களே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக Bigg Boss திகழ்ந்தது.

Bigg Boss சீசன்-1ல், ஆரவ் வெற்றிப் பெற்ற நிலையில், ஜுன் மாதம் 17ஆம் தேதி Bigg Boss சீசன்-2 தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்ட நிலையில், 100 நாட்களை கடந்து, இந்த சீசன் 105 நாட்கள் வரை சென்றது. வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். பொதுமக்கள் அளித்த வாக்கு எண்ணிக்கை யின் அடிப்படையில் 30 லட்சம் வாக்குகளை பெற்ற ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப் பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், ரித்விகா. அதற்குப் பின்னர், பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மேரி’ கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ரித்விகா  வின்னராக அறிவிக்கப் பட்டதும் அவருடைய பெற்றோர் மேடையேறினர்.

தனது மகள் வின்னரானது குறித்து அவரது தந்தை கூறியபோது, ‘ரித்விகா போன்ற ஒரு மகளை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அதைவிட உலகநாயகன் பக்கத்தில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். என் மகளின் வெற்றிக்கு பெரும்பங்கு கமல்ஹாசன் அவர்களுக்கு உண்டு. அவருக்கு எனது நன்றி என்று ரித்விகாவின் தந்தை கூறினார்.

பிக்பாஸ் 2 பட்டத்தை வென்ற பின்னர் ரித்விகா ‘நான் பெற்ற முதல் முழு வெற்றி இது. ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. இந்த பட்டத்தை வெல்ல எனக்கு என் சக போட்டியாளர்கள் பெரும் உதவியாக இருந்தனர். இந்த பட்டத்தை நான் அவர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.