இ-சிகரெட்டை பிடிக்கும் பழக்கமா? மாரடைப்பு வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகம்! – AanthaiReporter.Com

இ-சிகரெட்டை பிடிக்கும் பழக்கமா? மாரடைப்பு வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகம்!

சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்புஇ -சிகரெட்’ எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட் அறிமுக மான போது, உலகமே அதை மாபெரும் வரமாக பாவித்து வணங்கி வரவேற்பு கொடுத்தது. ‘‘புகை பிடிக்கும் பழக்கத்தை இது அடியோடு ஒழித்துவிடும்’’ என டாக்டர்கள்கூட பரிந்துரை செய்தார்கள். ஆனால் உலக சுகாதார நிறுவனம் இப்போது கவலையோடு இந்தியாவை எச்சரிக்கை செய்து இருந்தது. அதை சட்டை செய்யாதவர்களை தற்போது வெறொரு ஆய்வு முடிவு எச்சரிக்கை செய்துள்ளது.

 

இ-சிகரெட்டில் புகையிலை கிடையாது; ஆனால் நிகோட்டின் உண்டு. உள்ளே இருக்கும் திரவம் முழுக்க நிறைய நிகோட்டின் கலந்ததுதான். அதுதான் புகை பிடித்த மாதிரி உணர்வைத் தந்து உடலை பரபரக்க வைக்கிறது. சாதாரண சிகரெட்டுக்கு இருக்கும் விற்பனைக் கட்டுப்பாடுகள், விதிகள் எதுவும் இ-சிகரெட்டுக்கு இல்லை. அதனால் பல நிறுவனங்கள் ‘இது பாதுகாப்பானது, நவீனமானது’ எனச் சொல்லி இப்போதும் பலரையும் வசீகரிக்கும் சூழலில் புகையிலை சிகரெட்டை பிடிப்பவர்களை விட தினமும் இ-சிகரெட்டை பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகமாக உள்ளதென புதிய ஆய்வு கூறுகிறது.

சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாஸிங்க்டன் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இ-சிகரெட்டின் பயன்பாட்டினால் மாரடைப்பு வருவதற்கான தொடர்பு உள்ளதென கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் 69,452 பேர் பங்கேற்றுள்ளனர். இ-சிகரெட் மற்றும் புகையிலை சிகரெட் பயன் படுத்துபவர்கள் இருவரின் உடல் நலமும் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வில் இ-சிகரெட் பயன்படுத்தி யவர்கள் பெரும்பாலோனர்க்கு மாரடைப்பு வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 9,352 பேரில் மின்னனு சிகரெட்டை பயன்படுத்தியவர்களில் 333 பேர் (3.6%) நபர்களுக்கு ஏதோ ஒரு சூழலில் மாரடைப்பு வந்துள்ளதென ஆய்வு கூறுகிறது.

பல காரணங்களுக்காக உலகே இதை நேசித்தது. சிகரெட்டில் இருப்பது போன்ற நாற்றம் இல்லை; சாம்பல் விழுவதில்லை. எரிச்சலூட்டும் வாசமுள்ள புகை இல்லை. சிகரெட்டில் இருப்பது போல நான்காயிரத்துக்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் இல்லை. கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் அறிமுகமான இந்த இ-சிகரெட் குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபலமாக இதுவே பிரதான காரணம். அத்துடன் தினமும் இ-சிகரெட்டை பயன்படுத்துபவர்கள் என்கிற அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினமும் இ- சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 6.1சதவீதம் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. புகையிலை சிகரெட்டை பயன்படுத்துபவர்கள் எதிர் கொள்ளும் மாரடைப்பைப் போலவே மின்னனு சிகரெட் பயன்படுத்துபவர்களும் எதிர்கொள்கின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, இந்த இரண்டு வகையான சிகரெட்டையும் பயன் படுத்துபவர்களுக்கு 4.6 மடங்கு அதிகமாக மாரடைப்பு வருவதற்கான அபாயம் உள்ளது. ஆனாலும் ஆய்வாளர் ஸ்டேண்டன் க்ளான்ஸ், இளைஞர்கள் பலர் தொடர்ச்சியாக மின்னணு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். மக்கள் பலரும் இ- சிகரெட்டினால் அபாயம் குறைவு என நம்புகின்றனர். ஆனால், இந்த ஆய்வு மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதென்பதை கண்டறிந்துள்ளது.

புகையிலை சிகரெட்டிற்கு மாற்றாக இனி இ- சிகரெட் பாதுகாப்பானது எனப் பரிந்துரைக்க முடியாது. இ- சிகரெட்டினால் நுரையீரல் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தும் அதிகம் உள்ளது  என ஆய்வு கூறுகிறது.மாரடைப்பு அபாயத்தை குறைக்க வேண்டுமென்றால் புகையிலை பழக்கத்தை நிறுத்துவது மட்டுமே தீர்வாகும் என்று ஆய்வாளர் கூறுகிறார். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரீவ்டிவ் மெடிசின் ( American Journal of Preventive Medicine) இணைய பத்திரிகையில் வெளியாகியுள்ளது.