டாடா நானோ கார்கள் உற்பத்தியை நிறுத்திப்பூட்டாங்க! – AanthaiReporter.Com

டாடா நானோ கார்கள் உற்பத்தியை நிறுத்திப்பூட்டாங்க!

நம் இந்திய மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தர வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் முயற்சியில் உருவான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு நானோ காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் தொடக்க விலையாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக உலகின் மிக விலை குறைந்த கார் என்ற பெருமையை டாடா நானோ பெற்றது. மக்களின் கார் என்று விளம்பரம் செய்யப்பட்ட இந்தக் காரின் விற்பனை அமோகமாக இருந்தது. விலை குறைவான கார் என்பதால் மக்களிடம் அதிக வரவேற்பையும், கவனத்தையும் எளிதில் பெற்றது.

இந்நிலையில், விற்பனை குறைவு காரணமாக நானோ ஹேட்ச்பேக் மாடல் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய டாடா மோட்டார் நிர்வாகி ஒருவர்,”2019-க்குப் பிறகு நானோ கார் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அனைத்து கார்களும் விபத்து சோதனை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது தவிர கார்களில் உயிர் காக்கும் ஏர் பேக்குகள் கட்டாயம் இடம் பெற வேண்டும். மேலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் வசதி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் விபத்து சோதனை விதிகளை அனைத்து கார்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் வசதிகள் அக்டோபர் 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாகிறது.

இப்போது உள்ள நானோ காரில் இத்தகைய வசதிகளை செய்யவேண்டுமாயின் முற்றிலுமாக மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே நஷ்டத்தை தந்து கொண்டிருக்கும் திட்டத்தில் கூடுதல் முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் முன்வருமா என்பது சந்தேகமே. இத்தகைய வசதிகளை இந்த காரில் வைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய வசதிகள் வைத்தால் காரின் விலையை மேலும் உயர்த்த வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள சிறிய ரகக் கார்களுடன் போட்டியிட வேண்டிய கட்டாயம் நானோ-வுக்கு உள்ளது. மத்திய அரசின் புதிய விதிமுறைகள்படி மாற்றங்கள் செய்யும்போது காரின் விலை அதிகரிக்கும். அப்போது ஏற் கெனவே சந்தையில் உள்ள பிற நிறு வனங்களின் சிறிய ரக காரின் விலையை விட நானோ கார் விலை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழலில் நானோவின் விற்பனை எப்படியிருக்கும் என்பதை கணிப்பது மிகச் சுலபம்.

சமீப காலமாக நானோவின் விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே நிஜம். அடுத்த தலைமுறை நானோ என ஜென் நெக்ஸ்ட் பெயரில் அறிமுகமானது. ஆனாலும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2012-ம் ஆண்டில் இந்தக் காரின் விற்பனை 74 ஆயிரமாகும். ஆனால் 2015-ம் ஆண்டில் 21 ஆயிரம் கார்களே விற்பனையாகியுள்ளன.

ஏற்றுமதிச் சந்தை நானோவுக்கு சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. 2012-ம் ஆண்டில் 3,462 கார்கள் ஏற்றுமதியாயின. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 6 மாத காலத்தில் வெறும் 148 கார்களே ஏற்றுமதியாகியுள்ளன.ரெனால்ட் க்விட் மற்றும் நிசானின் ரெடி கோ ஆகிய கார்கள் நானோவுக்குப் போட்டியாக விளங்குகின்றன.

நானோவின் விற்பனையக விலை ரூ. 2.19 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரை உள்ளது. ஆனால் நிசானின் ரெடி கோ காரின் ஆரம்ப விலை ரூ. 2.42 லட்சமாகும். இந்த மாடலின் உயர்ந்தபட்ச விலையே ரூ. 3.49 லட்சமாக உள்ளது. இதில் ரூ. 3.37 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம் விலையிலான கார்களில் ஏர் பேக்குகள் உள்ளன.

நானோ கார் 600 சிசி திறன் கொண் டது. ஆனால் பிற நிறுவன மாடல் சிறிய ரக கார்களின் ஆரம்ப திறன் 800 சிசி ஆக உள்ளது. மாருதி சுஸுகியின் ஆல்டோ 800 ரகக் காரில் ஏர்பேக் உள்ளன. இதன் விலை ரூ. 2.89 லட்சம் முதல் ரூ. 3.15 லட்சம் வரை உள்ளது.

டாடா நானோ ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க இடம் தந்ததோடு பல்வேறு சலுகைகளையும் அப்போது முதல்வராயிருந்த நரேந்திர மோடி அளித்தார். ஆனால் அந்தச் சலுகைகள் அனைத்துமே ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை விற்பனை செய்தால் மட்டுமே டாடா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.இது போன்ற காரணங்களாலும் இத்திட்டம் கை விட மிடிவானது” என்றார்

இதனிடையே கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 275 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜூனில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.எனினும் நானோ கார் உற்பத்தி முழுமையாக கைவிடப்படவில்லை என்றும், முன்பதிவு அடிப்படையில் குஜராத்தில் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் டாடா நானோ கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.