கரன்சி மாற்ற வர்றவங்களுக்கு கருப்பு மை ஏன்? – மத்திய அரசு விளக்கம்

கரன்சி மாற்ற வர்றவங்களுக்கு கருப்பு மை ஏன்? – மத்திய அரசு விளக்கம்

மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் , “பல இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய நபர்களே, மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வந்து நோட்டுகளை மாற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது.இதேபோன்று நேர்மையற்ற நபர்கள், கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் அப்பாவி மக்களை பயன்படுத்துகின்றனர்; ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு கிளை என மாறி மாறி ஆட்களை அனுப்பி, பழைய நோட்டுகளை கொடுத்து ரூ.4 ஆயிரத்து 500 வீதம் மாற்றிக்கொள்கின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.இதனால் பணம் எடுத்து குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பலன் அடைகின்றனர், தேவைப்படுகிறவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என தெரிய வந்துள்ளது.

curr nov 16

இப்படி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் விதத்தில், தேர்தலின்போது ஓட்டு பதிவு செய்ததற்கு அடையாளமாக கை விரலில் அழியாத மை வைப்பதுபோல, வங்கிக்கு வந்து பணத்தை மாற்றிக்கொள்கிற நபர்களுக்கு அழியாத மை வைக்கப்படும். இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்த செயல்பாட்டு வழிமுறைகளை வங்கிகள் முடிவு செய்து கொள்ளலாம். பெரிய நகரங்களில் இது அமல்படுத்தப்படுகிறது. இதற்கான முடிவு, பிரதமர் தலைமையில் நடந்த உயர் மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இதன்மூலம் ஆட்களை அமர்த்தி வங்கிக்கு வந்து மீண்டும் மீண்டும் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும்.

பிரதம மந்திரியின் ‘ஜன்தன்’ திட்டத்தின்கீழான வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டுக் கான உச்சவரம்பு ரூ.50 ஆயிரம். ஏராளமான இந்த வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ.49 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக்கொள்வதற்கு இந்த வங்கிக்கணக்குகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதை அரசு தீவிரமாக கண்காணித்துக்கொண்டிருக்கிறது. இந்த ‘ஜன்தன்’ வங்கிக் கணக்குகளில் சட்டப்படி பணத்தை டெபாசிட் செய்கிறவர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. அதே நேரத்தில் மற்றவர்கள் தங்களது வங்கிக்கணக்குகளை தவறாக பயன்படுத்துவதை ‘ஜன்தன்’ வங்கிக்கணக்குதாரர்கள் அனுமதிக்கக்கூடாது என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

பண வினியோக முறைகளை பெரிதாக்குகிற விதத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் தபால் நிலையங்களில் கிராமப்புற மக்களின் தேவைகளை சந்திக்கிற அளவுக்கு ரொக்க கையிருப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், மத அமைப்புகள், கோவில் அறக்கட்டளைகள் தங்களுக்கு வருகிற ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 போன்ற குறைந்த மதிப்பினை கொண்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வது ஊக்குவிக்கப்படும். இது சந்தைக்கு குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் வருவதற்கு உதவும்.

மின்னணு பண பட்டுவாடாவை மேம்படுத்துகிற விதத்தில் ‘இ-வாலட்’ (மின்னணு பணப்பை) முறையை பிரபலப்படுத்துவற்காக அரசு தொழில் நுட்பக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது.‘உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’, ‘வங்கிகளில் பணம் இல்லை, எனவே வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகின்றன’ என்பது போன்ற வதந்திகளுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது. உப்பு தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. உப்பு தட்டுப்பாட்டுக்கோ, தற்காலிக விலை உயர்வுக்கோ காரணம் இல்லை. இதேபோன்று, தேவையான அளவுக்கு பணமும் கையிருப்பு உள்ளது. எந்த நிறுவனமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை.

உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றின் கையிருப்பை அரசு உறுதி செய்யும்.நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் வினியோகம், கூர்ந்து கண்காணிக்கப் படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் அசைவு மற்றும் வினியோகம் பற்றி மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமையில் செயலாளர்களையும், பிற மூத்த அதிகாரிகளையும் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. வங்கிகளின் மூத்த பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கும் மத்திய மந்திரிசபை செயலாளர் தலைமை வகிப்பார். இந்த குழு, சந்தையில் பணம் கிடைப்பதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு எடுக்கிற முடிவுகளை கண்காணிக்கும்.

கள்ள நோட்டுகள் புழக்கத்தை கண்காணிப்பதற்கும், வங்கிகளில் கருப்பு பணம் டெபாசிட் செய்வதையும் கண்காணிப்பதற்கும் பிரத்யேகமாக ஒரு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படலாம் என்பதெல்லாம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மக்கள் தங்களது ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டுகளை (பற்று மற்றும் கடன் அட்டைகள்) பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்வதற்காக ‘மைக்ரோ ஏ.டி.எம்.’ என்னும் குறு ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!