தாத்தா இரட்டைமலை சீனிவாசன்! – AanthaiReporter.Com

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டை மலை சீனிவாசன். குறிப்பாக லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு, 5ம் ஜார்ஜ் மன்னரிடம் கை கொடுக்காமல், நான் தீண்டத்தகாதவன். பறையன் என்று சொல்லி அதிர வைத்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன்.

சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற கிராமத்தில் 1859ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். தனது வாழ்நாளில் சிறந்த அரசியல் வாதியாகவும், போராளியாகவும், தலித் மக்களின் உரிமைக்காக போராடியவர்களில் முன்னோடி யாகவும் திகழ்ந்தவர் இரட்டைமலை சீனிவாசன். பறையன் மகாஜன சபை இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.

அதிலும் ‘பறையன்’ என்ற பெயரில் இதழ்… இவ்வளவு தொழில் நுட்பம் உள்ள இந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், 1893ம் ஆண்டே பறையன் என்ற இதழை தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். முதலில் மாத இதழாக வந்த இந்த ‘பறையன்’ பின்னர் வார இதழாக வெளியானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1900 வரை நிற்காமல் வெளியானது என்பது இதன் சிறப்பு.

1930 ஆண்டு லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவில் இருந்து அம்பேத்கர், ஏ.டி.பன்னீர்செல்வம், ஏ. ராமசாமி முதலியார் போன்ற முக்கிய தலைவர்களுடன் சென்று தாழ்த்தப்பட்டோரின் நிலையை ஆங்கிலேய மன்னருக்கு உணர்த்தியவர். அம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் 5ம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்கிய போது, தான் கை குலுக்க மறுத்தார் இரட்டை மலை சீனிவாசன். ஏன் என மன்னர் கேட்ட போது, நான் தீண்டத்தகாதவன் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது என்பதை உணர்த்த சீனிவாசன் செய்த செயலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்து கை குலுக்கினார்.

இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் 2000வது ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப் பட்டது. அதே போன்று காந்தி மண்டபம் அருகில் அவருக்கு மணிமண்டபம் ஒன்றும் திமுக தலைவர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

வாழ்நாள் முழுவதும் சமூக சீர்த்திருத்தம் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி இழிவு நீங்க பாடுபட்ட தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 1945ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 18ம் தேதி மறைந்தார். அன்னாரது உடல் சென்னை ஓட்டேரி சுடுகாட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அந்த சுடுகாட்டிற்கு சென்றால் அவரது நினைவிடத்தை பார்க்கலாம். அந்த அளவிற்கு பராமரிப்புகள் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.