தமிழ்நாட்டில் 10% அமலாக்கம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது! – AanthaiReporter.Com

தமிழ்நாட்டில் 10% அமலாக்கம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது!

தமிழ்நாடு மாநில மக்கள் தொகையில் முன்னேறிய உயர் சாதிகளின் விழுக்காடு சுமார் 11 விழுக்காடாக உள்ளது. தமிழகத்தின் மத்திய – மாநில உயர்பதவிகள், மருத்துவம் பொறியியல் துறையில் மேனிலையில் இருப்போர், ஊடகங்கள் உள்ளிட்ட தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்போர் விழுக்காடு குறைந்தது 30 விழுக்காடு முதல் அதிகப்பட்சமாக 90 விழுக்காட்டுக்கும் அதிக அளவில் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு அதிலும் ஆண்டுக்கு 8 லட்சம்வரை ஊதியம் பெறும் பிரிவினருக்கு 10 விழுக்காடு என்பது எவ்வாறு நியாயமாகும். இது அமலாக்கப்பட்டால் கிட்ட்த்தட்ட அனைத்து உயர்சாதிகளுக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். மேலும் மீத முள்ள பொதுப்பிரிவான 28 விழுக்காட்டிலும் சிங்கத்தின் பங்கு அதிகமாகக் கிடைக்கும். ஆனால், கிட்டத்தட்ட 89 விழுக்காடு மக்களுக்கு 50 விழுக்காடு இடங்களே கிடைக்கும்.

பட்டதாரிகளைக் கணக்கில் கொண்டால் தோராயமாக 70 – 80 விழுக்காட்டினர் பட்ட்தாரிகள். இதர பிறப்பட்ட சமுதாயங்கள், பட்டியல் சாதிகள், பழங்குடிகள், சிறுபான்மையினரில் இது சராசரியாக 30 – 40 விழுக்காடுதான். இன்னும் பட்டியல் சாதிகள், பழங்குடிகள், சிறுபான்மை மக்களை மட்டும் கணக்கில் கொண்டால் 60 விழுக்காட்டுக்கு அதிகமாகக் கூட இருக்கலாம். இப்படி ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலையில் ஏற்கனவே முன்னேறிய சாதிகளுக்கு தனியாக 10 விழுக்காடு; பொதுப்பிரிலும் சிங்கத்தின் பங்கு என்பது சமூக நீதி ஆகுமா?

சில வட மாநிலங்களில் 50% முன்னேறிய உயர்சாதிகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு 10% நியாயமாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது ஆகும். தனியார் துறைகளில் மட்டுமல்லாமல் நீதித் துறையிலும் சமூக நீதி கோரும் காலம் இது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்பணசாமி