சுவாதி மற்றும் ராம்குமார் நினைவாக மீண்டும் ஒருதடவை

சுவாதி மற்றும் ராம்குமார் நினைவாக மீண்டும் ஒருதடவை

சரியாக ராயப்பேட்டை மார்ச்சுவரிக்கு நேர் எதிராக இருக்கிறது அந்த பிரியாணிக் கடை. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அள்ளும். எனக்குப் பல வருடங்களாக பரிச்சயமான கடை. நேற்றும் போயிருந்தேன். விஜய் டீவியில் 2000த்தில் வந்த குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சியில் பணிபுரிந்த காலத்தில் இருந்து அந்தக் கடைக்குப் போவதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அப்போ தெல்லாம் ராயப்பேட்டை மார்ச்சுவரியே கதி என்று கிடப்போம். பார்க்காத பிணங்கள் இல்லை. சிறியவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அத்தனை பிணங்களையும் பார்த்தாகி விட்டது. ஒருமுறை யானைக் கவுனியில் ஒரு சின்னப் பையனை உடன் வேலை பார்க்கிற பையன்கள் அடித்துக் கொன்று தண்ணீர் இல்லாத தொட்டியில் சாக்கு மூட்டையில் கட்டி உள்ளே போட்டு விட்டனர். உடலைத் தூக்கிக் கொண்டிருப்பதைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு குரல், ஒரு கை பிடிங்க சார் என்றது. யோசிக்காமல் அந்தச் சாக்கு மூட்டையில் கையை வைத்து விட்டேன். அந்த மூட்டையைத் தொட்ட பிறகுதான் அது பிண மூட்டை என்று சுரணையானது. அந்தப் பிணம் என்னைப் பல காலம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.அந்தச் சிறுவன் என்னைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தான்.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு கோயில் கோயிலாக ஏறி இறங்கினேன். அதற்கப்புறம் பல பிணங்களைப் பார்த்திருக்கிறேன். பெரியளவில் பாதிப்புகளை அவை உருவாக்கவில்லை. வாழ்க்கையின் நிலையாமை குறித்த தெளிவான பார்வையை எனக்கு அந்த மார்ச்சுவரி அனுபவங்கள்தான் கொடுத்தன. பெரும் ஆட்டம் ஆடிய கோடீஸ்வரர் ஒருத்தர் பிணமாகிப் போன போது, அவருடன் இருந்தவர்கள் அவரைப் பற்றிய கதைகளை மோசமாகத்தான் நினைவு கூர்ந்தார்கள். ஆடாத ஆட்டம் ஆடிய என்னுடைய நண்பன் ஒருவன் பிணமான போது அவனது முகம் அமைதியின் உருவாக இருந்தது. அப்போதுகூட மனம் அதிரவில்லை. இதுமாதிரி பல பிணங்களைப் பார்த்த போதும் அதிராத மனம், சுனாமி வந்த போது அதிர்ந்து விட்டது. சின்னதும் பெரிதுமான மக்கள் மூக்கிலும் காதிலும் மணல் துகள்களோடு ரத்தத் திட்டுகளுடன் வராந்தாவில் கிடத்தப்பட்டிருந்தனர்.அந்தக் காட்சி என்னைத் தூங்க விடவில்லை.

பகலிலும் குடிக்கும் பழக்கம் ஏன் அந்தத் தொழிலில் உள்ளவர்களை ஒட்டிக் கொள்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் உடல் முழுக்க ஒருவித வாடை ஒட்டிக் கொண்டது போலத் தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த வேலையை விட்டு வெளியேறிய பிறகு அந்தப் பக்கம் போவதை பெரும்பாலும் தவிர்ப்பேன். அப்படியே போனாலும் துல்லியமாக என்னால் அந்த வாடையை இனம்காண முடியும். அந்த பிரியாணிக் கடைக்காக சில நேரங்களில் போவதுண்டு. அப்படித்தான் நேற்றும் தற்செயலாக அந்தப் பிரியாணிக் கடைக்குப் போனேன். எவ்வளவோ பிணங்களைப் சாதாரணமாகப் பார்த்த அந்த இடத்தில் நேற்று, வழக்கத்தை மீறி அமானுஷ்யமான உணர்வு இருப்பது போலத் தோன்றியது.

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் உடல் அந்த மார்ச்சுவரியில்தான் வைக்கப்பட்டிருந்தது. எத்தனையோ பிணங்களைப் பார்த்த போதெல்லாம் வராத நடுக்கம், அவன் அங்கே வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை யோசித்த தருணத்தில் வந்தது ஏனென்று தெரிய வில்லை. அவன் கொலை செய்தானா என்கிற கேள்விகளுக்கெல்லாம் போகவில்லை. ஒரு குக்கிராமத்து இளைஞனின் வாழ்வு தொடங்கிய இடத்தையும் அது முடிந்த விதத்தையும் யோசித்துப் பார்த்தேன். எல்லோரையும் போல வாழ்ந்திருக்க வேண்டிய இளைஞன் இப்படி மர்மமான முறையில் சாகடிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பெண்ணும்கூடத்தான். அதுவும் வாழ வேண்டிய பெண்தானே?

வாழ்க்கை நினைத்தால் அது எந்த நேரத்திலும் நம்மைப் புரட்டிப் போட்டு விடும் என்பதை நினைக்கையில் அச்சமாக இருந்தது. ஒரே நேர்கோட்டில் வாழ்க்கை அமையும் என்பது அதிர்ஷ்டவசமானது என்பதை நினைக்கையில் ஒருவித கலக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.சங்க இலக்கியத்தில் வரும் பாடல் ஒன்று நினைவிற்கு வந்தது. இதைப்பற்றி ஏற்கனவே மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய சங்கச் சித்திரங்கள் தொடரில் எழுதியிருக்கிறார். ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்/ ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,/புணர்ந்தோர் பூ அணி அணிய,/பிரிந்தோர்/ பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,/படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!/இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. என்கிறது அந்தப் பாடல். ஒரு இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒரு வீட்டில் சாவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த உலகம் இப்படித்தான். இன்னாது அம்ம இவ்வுலகம். இதன் இயல்பை உணர்ந்தவர்கள் அதில் உள்ள இனியவற்றை மட்டும் காண்பார்கள் என்பதுதான் இதன் பொருள். நம்புவது நடக்கவேண்டும் என நம்புகிறோம் அவ்வளவுதான். இருக்கிற வாழ்க்கையை நல்விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என உடனடியாகத் தோன்றியது.

ஏதோ ஒரு படிப்பினை கிடைத்தது போல உணர்ந்தேன். மார்ச்சுவரி வாசலில் சில போலீஸ்காரர்கள் அசிரத்தையாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த இடத்தில் நிற்கப் பிடிக்கவில்லை. உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிப் போய் விட வேண்டுமென தோன்றியது. ஆர்டர் கொடுத்த பிரியாணியை வேண்டாமென்றேன். தெரிந்தவர் அவர் என்பதால், ஏன் என்றார். புரட்டாசி மாதம் என்பது மறந்து போய்விட்டது என்றேன். அது பொய் என்று அவருக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்.

சரவணன் சந்திரன்

 

Related Posts

error: Content is protected !!