மனுசனோட வீக்னெஸை மிஷின் சொல்லுது: அதைப் புரிஞ்சிக்கணும்! – மோடி அட்வைஸ்! – AanthaiReporter.Com

மனுசனோட வீக்னெஸை மிஷின் சொல்லுது: அதைப் புரிஞ்சிக்கணும்! – மோடி அட்வைஸ்!

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2012ம் ஆண்டு, முதன்முறையாக ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்நாளில் குடியரசு தலைவரால், விளையாட்டுகளில் சாதனைப் படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, ”ஃபிட் இந்தியா” எனும் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள், மக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் விளையாட்டின் முக்கியத்துவம், ஆரோக்கியத்திற்காக யோகா செய்யும் முறை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”உடற் பயிற்சி என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக திகழ்கிறது. சில தசாப்தங்களுக்கு முன், ஒரு சராசரி மனிதன், 8 முதல் 10 கிமீ தூரம் வரை நடக்கவோ, சைக்கிளில் செல்வதோ அல்லது ஓடுவது போன்றவற்றில் ஈடுபட்டான். ஆனால், தற்போது வந்துள்ள தொழில்நுட்பத்தால், உடல் செயல்பாடுகள் குறைந்துள்ளன. நாம், குறைந்த தூரமே தற்போது நடக்கிறோம். அதே தொழில் நுட்பம், நாம் குறைவாக நடப்பதாக நமக்கு தெரிவிக்கிறது தொழில் நுட்பம் தரும் உண்மைகளை நாம் பயன்படுத்திக கொள்ள வேண்டும்” என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த ஆண்டு விளையாட்டுக்கான விருதுகளை பெரும் வெற்றியாளர்களும் கலந்துகொண்டனர்.