விஜயகாந்தை அரசியல் விளையாட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள்! – AanthaiReporter.Com

விஜயகாந்தை அரசியல் விளையாட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள்!

ஒரு காலத்தில் சினிமாவில் கால்களால் எதிரிகளை பந்தாடி கைதட்டல் பெற்றவர் விஜயகாந்த். ரஜினியியின் சாயலில், அவரை காப்பி அடித்து சினிமாவுக்கு வந்தவர்கள் எல்லாம் காணாமல் போனபோது அவரைப்போலவே அறிமுகமாகி பிறகு தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் ஜெயித்தவர் விஜயகாந்த்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஆளுமைகொண்ட ஹீரோவாகவே இருந்தார். அதற்கு சில உதாரணங்கள்.

எல்லோரும் இலங்கை பிரச்சினை பற்றி பேசத் தயங்கிய காலத்தில் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததோடு, ஈழம் மலரும் வரை பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்தவர்.

எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களுக்கு லட்சக் கணக்கில் வாரிக் கொடுத்த வள்ளல். ரசிகர் மன்றங்களை மக்கள் நலத் திட்டங்கள் நோக்கி திருப்பிய முதல் நடிகர்.

பழம்பெருச்சாளிகளிடமிருந்து நடிகர் சங்கத்தை கைப்பற்றி அதன் கடனை அடைத்தவர். அவர் பதவியில் இருந்த காலத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் வேட்டியை மடித்துக் கொண்டு முதல் ஆளாக களத்தில் இறங்கியவர்.

நல்ல மனிதனாக, நல்ல திரை நட்சதிரமாக வெற்றி பெற்ற விஜயகாந்தால் நல்ல அரசியல்வாதி யாக வெற்றி பெற முடியவில்லை. காரணம் கொள்கை இல்லாமல், குறிக்கோள் இல்லாமல் கட்சி தொடங்கியது. கட்சிக்குள் குடும்பத்தை அதிகாரம் செலுத்த அனுமதித்தது.

கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளேயே எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது எம்.ஜி.ஆரால்கூட சாதிக்க முடியாத ஒன்று. ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு அரசியலில் அவரால் தன்னை வளர்த்தெடுக்க முடியாமல் போனது.

உடல் நலக்குறைவு காரணமாக எந்த இடத்தில் எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற நிதானத்தை இழக்க நேரிட்டதால் கேப்டனாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் காமெடியனாக பார்க்கப்பட்டது காலம் செய்த கோலம்.

அவர் குடிகாரர் என்கிற இமேஜை அவரது எதிரிகளும், உடன் இருந்தபவர்களுமே திட்டமிட்டு உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார்கள்.

இறுதியாக ஒரு உண்மையை அணைவரும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். சினிமாவில் ஜெயித்த விஜயகாந்த் அரசியலில் தோற்றார்.

தோற்றவர் போராடி ஜெயிக்கத்தான் வேண்டும். ஆனால் உடல் நலமில்லாத ஒருவர் எப்படிப் போராடுவார். விஜயகாந்த் சிறந்த போராளிதான். போராடுவதற்கு கையில் ஆயுதம்கூட வேண்டிய தில்லை. உடலில் சக்தி வேண்டாமா?

கருணாநிதி மறைவுக்கு அவர் குமுறி அழுதது அவர் குழந்தையாகி விட்டதை காட்டுகிறது. கருணா நிதி சமாதிக்கு அவர் வந்த காட்சிகள் அவர் உடல் நிலையை காட்டுகிறது.

அதனால் விஜயகாந்த் குடும்பத்தாரும், அவர் மீது அக்கறை கொண்டவர்களும் தயவு செய்து அந்த மனிதனை அலங்காரம் செய்து நாற்காலியில் உட்கார வைக்காதீர்கள். அவரால் செய்ய முடியாத விஷயங்களை வற்புறுத்தி செய்ய வைக்காதீர்கள். அவர் முகத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்காதீர்கள்.

அவருக்கு இப்போது தேவை நல்ல ஓய்வு, நிம்மதி, அமைதி, அதை அவருக்கு கொடுங்கள். அரசியல் விளையாட்டிலிருந்து அவரை விடுதலை செய்யுங்கள்.

அவரின் தொண்டர்களை இன்னொருவர் வழிநடத்தட்டும். நேர்மையும், துணிவும், கொள்கையும், குறிக்கோளும் கொண்டு வழிநடத்தினால் கேப்டன் சாதிக்காததை கூட சாதிக்க முடியும்.

இயற்கை கேப்டனை பழைய ஆரோக்கியத்தோடு திருப்பித் தரும்போது அவர் வழி நடத்தட்டும். அதுவரை அவருக்கு அரசியல் ஒப்பனை செய்தும், அலங்கார ஆடை அணிவித்தும் அரசியல் நாடகத்தை நடத்தாதீர்கள். அது அடிப்படை மனிநேயத்துக்கே எதிரானது.

மீரான் முகமது