மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக 28,000 கோடி ரூபாய்! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக  28,000 கோடி ரூபாய்! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

மத்திய அரசுக்கு இடைக்கால நிதியாக ரூ.28000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் சென்ட்ரல் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டின் அரசு சார்பிலான ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி அளிக்கப்பட்ட மொத்த தொகை சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயாகும்.

ஆனாலும் மத்திய அரசு, தற்போதும் தனது நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியின் பெரும் பகுதியைத் தனக்கு மாற்றுமாறு கோரி வந்தது. இதற்கு அந்த வங்கியின் முந்தைய கவர்னரான உர்ஜித் படேல் உடன்படவில்லை. இருப்பினும் மத்திய அரசு தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சக்திகந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர், மத்திய அரசுடன் சற்று இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மத்திய அரசு, ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர் களுக்கு வரிச்சலுகை, பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில் நடப்பு நிதியாண்டில் ரூ.28,000 கோடியை இடைக்கால டிவிடெண்டாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்தச் சூழ்நிலையில், மத்திய வங்கியின் மத்திய வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று, இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார்

இதை அடுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில், ‘‘வரையறுக்கப்பட்ட தணிக்கை ஆய்வு அடிப்படையிலும் நடைமுறையில் உள்ள பொருளாதார மூலதன கட்டமைப்பை பயன்படுத்தியும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான அரை ஆண்டுக்கான இடைக்கால நிதியாக மத்திய அரசுக்கு 28,000 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தன் உபரி பணத்தை மத்திய அரசுக்கு இடைக்கால முதலீட்டுக்கான டிவிடெண்டாக வழங்கவிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது .

ஆக மத்திய அரசுக்கு ஏற்கெனவே நடப்பு நிதியாண்டில் 40,000 கோடி ரூபாய் இடைக்கால டிவிடெண்டாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட உள்ள 28,000 கோடி ரூபாயையும் சேர்த்தால், இந்தத் தொகை 68,000 கோடி ரூபாயைத் தொட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!