இலங்கை ; மீண்டும் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கை ; மீண்டும் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்கே!

அடுத்தடுத்து அரசியல் வானில் குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் இன்று காலை மீண்டும் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். முன்னாள் அதிபரான மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக சிறிசேனா நியமித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்க தயாரானார்.

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தை சிறிசேனா கலைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பாராளுமன்றக் கலைப்பு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு ரணில் விக்ரமசிங்கே தனது பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபித்தார். ஆயினும் ராஜபக்சே ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

நேற்று ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதை ஒட்டி இன்று ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கை அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!