ராமின் ‘பேரன்பு’ இசை வெளியீடு விழா:- முழு விபரம்!

ராமின் ‘பேரன்பு’ இசை வெளியீடு விழா:-  முழு விபரம்!

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் ஓப்பனாக பேசி சர்ச்சையைக் கிளப்பும் இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் தங்க மீன்கள் படத்தை போலவே குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்று நெதர்லாந்து, பெர்லின், வெனீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்குள்ள அனைவர் மனதையும் கவர்ந்ததுள்ளது. இந்த நிலையில், ராம் உடன் நான்காவது முறையாக யுவன் சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (ஜூலை 15) மாலை நடைபெற்றது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என திரைத்துறையைச் சார்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

விழாவில் பாரதிராஜா பேசும் போது, “நானும் திரைத்துறைக்கு வந்து ஐம்பதாண்டு காலங்கள் ஆகி விட்டன. நான் ஒரு வெகுஜன இயக்குநர். பல திரைப்பட விழாக்களுக்கு ஜூரியாகவும், தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் மராத்தி, வங்கம் போன்ற படங்கள் எல்லாம் பார்த்து ஆதங்கப்பட்டிருக்கிறேன். தண்ணீரில் கத்தியைப் போட்டால் எப்படி ஆழமாக இறங்குகிறதோ,  அது போல் நம் மொழியில் இப்படி ஆழமாக எடுக்கவில்லை என நினைத்திருக் கிறேன். ஆனால் இன்றைய தலைமுறை இயக்குநர்கள் அதை செய்து வருகிறார்கள். அதில் ராம் தனி இடம் பிடிக்கிறான். படம் பார்த்து இரண்டு நாள்கள் தூங்கவே இல்லை. இதில் குறிப்பாக தேனப்பனை பாராட்ட வேண்டும். அவன் சம்பாதித்த சம்பாத்தியத்திற்கு இப்படம் காணிக்கை. வியாபாரிதான் ஆனால் நீ சாப்பிட்ட உப்பிற்கு இப்படம் தயாரித்ததன் மூலம் நன்றி செய்திருக்கிறாய்.

யுவன் சங்கர் ராஜா. இவங்க அப்பா ஜாம்பவான். இது வரை இந்தி, தெலுங்கு என ஏழெட்டு இசை யமைப்பாளர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன். எல்லா மேடைகளிலும் சொல்லுவேன், இந்தியாவில் இளையராஜாவைத் தவிர பின்னணி இசையமைப்பதற்கு யாரும் பிறக்கவில்லை. எனக்கும் அவனுக்கும் ஆயிரம் கருத்து வேறு பாடு இருக்கலாம். யுவனோட பல படங்களை பார்த்திருக்கிறேன், பாடல்கள் கேட்டிருக்கிறேன். இந்த படத்திற்கு வாசிக்க வேண்டுமென்றால் தனித்த ஞானம் வேண்டும். இவங்க அப்பனை பார்த்து அதிசியத்தேன், அதே போல் இப்ப இவனை பார்த்தும் வியக்கிறேன். பின்னணி இசை இந்த படத்தின் ரத்த நாளம். அதை சரியாக் செய்திருக்கிறான்.

ராமின் கண்டுபிடிப்பு அஞ்சலி, அது உன் பெயரை காப்பாற்றும். அதே போல் படத்தில் நடித்திருக்கும் திருநங்கை அஞ்சலி அமீர், அந்த அம்மாவை பார்த்து வியக்கிறேன். இந்த படத்தில் அவர்களை பயன்படுத்தியதற்கு துணிச்சல் வேண்டும். சாதனாவை குழந்தையிலிருந்து பார்க்கிறேன். தங்க மீன்கள் படம் பார்த்துட்டு இவ நம்ம பொண்ணு ஆச்சே என ஆச்சர்யபட்டேன். அகில இந்திய அளவில் இப்படி ஒருத்தர் நடிப்பது கஷ்டம். இந்த ஆண்டு இவளுக்கு நடிப்பிற்காக விருது கிடைக்க வில்லை என்றால் சினிமா எல்லாமே பொய் ஆகிவிடும். ஊரில் போட்டோ ஸ்டுடீயோ வச்சு இருந்தான் தேனி ஈஸ்வர். எங்க வீட்டில் இருக்கும் குடும்பப் புகைப்படம் எல்லாம் அவன் எடுத்தது தான். ரவி வர்மாவை ரொம்ப ரசிப்பேன். இவர்கள் எல்லாம் சாதாரண புளியங் காட்டில் இருந்து வந்தவர்கள். தேனி ஈஸ்வர் எங்க மண்ணுக்கு கிடைத்த மற்றொரு பெருமை.” என்றார்

மிஷ்கின் பேசும் போது, ““இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் ஒரு படத்தின் தலைப்பை மட்டும் சொன்னார். அந்த தலைப்பில் மட்டும் படம் எடுத்தீர்கள் என்றால் 15 கோடி வசூல் கிடைக்கும். அந்த தலைப்பின் பெயர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. அதே போல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வந்து ஒரு தலைப்பு சொன்னார், அது ராம். ‘பேரன்பு’. சினிமா இரண்டு வகையில் இயங்குகிறது. ஒன்று யாசகம் கேட்பது மற்றொன்று யாசகம் கொடுப்பது. ராம் தானம் கொடுத்திருக்கிறான் இந்த திரைப்படத் துறைக்கு இருட்டறையில் பார்க்க வேண்டிய படம் அது, ஆனால் சூரிய ஒளியில் பார்க்க வேண்டிய திரைப்படம் பேரன்பு. பைபிள், பகத்வத் கீதை, குரான் எப்படி வீட்டில் இருக்கிறதோ அதே போல் பேரன்பு படத்தின் டி.வி.டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதை தயாரிப்பாளர் தேனப்பன் சாரிடம் வாங்கி கொள்ளுங்கள். அதை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள். இதற்கு முன் தேனப்பன் சார் நீங்கள் தயாரித்தது படம் கிடையாது. என்னுடைய உதவியாளர்களிடம் சொல்லுவேன் ஒரு படம் பார்த்து சினிமா கற்றுக்கொள்ளுங்கள் அது ‘செவன் சாமுரய்’. இன்று முதல் சொல்வேன் பேரன்பு பார்த்து கற்று கொள்ளுங்கள்.

அதே போல் படத்தில் நடித்திருக்கும் ‘மம்முக்கா’வை பற்றி சொல்லியே ஆக வேண்டும். படத்தில் ஒரு காட்சியில் மம்முக்காவின் நடிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு அதிர்ச்சியை அனுபவித்ததே கிடையாது. அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். கேமரா மேனும், இயக்குநரும் பக்கத்தில் போகும் போது நடிகன் தள்ளிப் போகிறான். அப்படி ஒரு நடிப்பு நடித்திருக்கிறார்.” என்உ தெரிவித்தார்

இயக்குநர் அமீர் பேசுகையில், “படத்தின் தலைப்பை வைக்கும் போதே இயக்குநரின் குணாதிசயம் வெளிப்படும். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் மிஷ்கின் பிசாசு என்று வைத்திருக்கிறார், அவரே ஒத்துக் கொள்வார். நாம் எல்லோரும் மாற்றுத் திறனாளிகளை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த பெண்ணின் பார்வையில் இந்த உலகத்தை பார்க்கிற பார்வை, அவளுடைய சகோதரன், அப்பா என தன்னுடைய குடும்பத்தில் அப்படி யாரும் இல்லை என்கிற பார்வை இருக்கிறதல்லவா அது தான் ராமின் பேரன்பு. தன்னுடைய பெண்ணிற்கு மம்மூட்டி மாப்பிளை பார்க்கப் போகும் காட்சி இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அது போன்ற காட்சி எனக்கு தெரிந்து இந்திய சினிமாவில் வந்தது கிடையாது.”

இசை அமைப்பளர் யுவன் சங்கர் ராஜா பேசும் போது, “இப்படத்தின் இசையமைப்பாளர் யுவனிடம் விழாவிற்கு வந்திருந்தவர்களால் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. நீங்கள் பல படங்களுக்கு தரமான இசையமைத்துள்ளீர்கள் ஆனால் ஒரு விருது கூட கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு, “ ரசிகர்களின் அன்பே பெரிய விருது. எந்த வேலையையும் செய்வதற்கு முன் எனக்கு அங்கிகாரம் கிடைக்க வேண்டும், விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடையாது. அது ஆடியன்ஸ் மனதில் போய் பதிந்தால் மகிழ்ச்சி” என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய யுவன், “ இந்த படத்தில் மம்மூட்டி சார் நடிக்க ஒத்துக் கொண்டது ரொம்ப ஹேப்பி. இது வரை எங்கள் கூட்டணியில் உருவான எந்த படத்தின் சாயலும் இருக்க கூடாது என்று செய்திருக்கிறோம். இந்த படம் ஒரு அனுபவம், இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை உணர்வீர்கள்.”

கருபழனியப்பன் தன் உரையின் போது, “இயக்குநர்கள் நடிக்க வேண்டாம் என்று சித்தார்த் சொன்னார். மம்மூட்டி மாதிரி நடிகர்கள் இருந்தால் நாங்கள் ஏன் நடிக்க வருகிறோம். எப்போதும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தை பார்க்காமலே பேசிவிட்டு சென்றுவிடுவோம். ஆனால் இப்படத்தை பார்த்து விட்டு பேசுகிறோம். அதிகமாக துன்பப்படுபவர்கள் யார் என்று பார்த்தால் புகழ்பெற்றவர்களுக்கு மகனாக பிறப்பது தான். காரணம் அப்பாவோடு ஒப்பீட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நிறைவேற்றுவதே மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதை இந்த படத்தில் யுவன் நிறைவேற்றி இருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் பற்றி சொல்லத் தேவை இல்லை, அவர்கள் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஓர் சிறந்த உதாரணம் சமுத்திரக்கனி இந்த படத்தில் அறிவுரை கூறவில்லை. எல்லரும் சொல்வது போல் இப்படம் துயரத்தின் அடையாளம் இல்லை கொண்டாட்டத்தின் அடையாளம்.”

படத்தின் ஹீரோ மம்மூட்டி, “படத்தை பற்றி நான் ஏதும் பெரிதாக பேசவில்லை. படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் பேசிவிட்டார்கள். அவங்க நிறைய பேருகிட்ட பேசுவார்கள். இங்க பார்க்கப் போகிறவர்கள் பேசுவார்கள். அப்படிப் பேசி பேசி இந்த படம் பேசப்படும் படமாக மாறட்டும்.”

error: Content is protected !!