கால நிலை அவசர பிரகடனத்தை உடனடியாக செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை! – AanthaiReporter.Com

கால நிலை அவசர பிரகடனத்தை உடனடியாக செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

ஏற்கெனவே இந்த பரந்த உலகில் தேவைப் படும் இடத்தில் மழை இல்லாமையும்,காய்ந்து கிடக்க வேண்டிய இடத்தில் தீப் பிடித்தும் சூழல் மாரி வரும் நிலையில் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டியதன் அவசியத்தை பாங்காக் காலநிலை மாநாடு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளது. இது ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணியாகவே தோன்றுகிறது.

புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து, அறிவிப்ப தற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு காலநிலை மாநாடு வரும் 23 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. அம்மாநாட்டுக்கு ஆயத்தமாவதற்காக கானா, பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என்று ஐ.நா. அமைப்பு அறிவித்திருந்த நிலையில், ஆசிய – பசுபிக் மண்டலத்திற்கான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது.

புவிவெப்பமயமாதலுக்கு ஆசிய பசுபிக் நாடுகள் இதுவரை முதன்மைக் காரணம் இல்லை என்றா லும், இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் மாசுக்காற்று வெளி யாகும். அதுமட்டுமின்றி, புவிவெப்பமயமாத லால் இந்நாடுகள் தான் மிகக்கடுமையான பேரழிவு களை சந்திக்கும். புவிவெப்ப மயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய இந்தியாவும் இம்மண்டலத்தில் தான் உள்ளது என்பதால் இம்மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், பன்னாட்டு அமைப்புகள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் தமிழகத்தில் இருந்து நான் உருவாக்கிய பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர. அருள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட் டில், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியே விரிவாகவும், அழுத்தமாகவும் விவாதிக் கப்பட்டன.

மாநாட்டில் பேசிய ஐ.நா காலநிலை பிரிவு துணை செயலரும், இந்தியருமான ஓவைஸ் சர்மத் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின் இலக்குகளை முழுமையாக நிறைவேற்றினால் கூட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகும். இதனால் பயன் கிடைக்காது. மாறாக, உலகநாடுகள் அனைத்தும் இணைந்து வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை செப்டம்பர் 23 ஐநா மாநாட்டில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை தங்களின் அமைப்புகள் சமரச மின்றி மேற் கொள்ளும் என தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் வராவுட் சில்பா ஆர்ச்சா ஆசிய- பசிபிக் மண்டலத்திற்கான ஐ.நா. சமூக, பொருளாதார ஆணைய செயலர் அர்மிடா அலிஸ்ஜபானா ஆகியோர் உறுதியளித்தனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்த மாநாடும், நியூயார்க்கில் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு காலநிலை மாநாடும் கூடிக்கலையும் தன்மை கொண்ட வையோ, உலகத் தலைவர்கள் சுற்றுலா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வையோ அல்ல. மாறாக, புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவிலிருந்து மனித குலத்தை காப்பதற்காக எழுப்பப்படும் கூக்குரல்கள் ஆகும். ஆகவே இந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை அலட்சியம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டியது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலையாய கடமையாகும்.

உலகைக் காப்பாற்றுவதற்கான இலக்குகளை எட்ட இந்தியா இப்போது பயணிக்கும் வேகம் போதாது. இந்த வேகத்தை விரைவுபடுத்துவதற்காகத் தான் இந்தியாவில் காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை நெருக்கடியை கட்டுப் படுத்துவதற்கான ஆசிய-பசுபிக் மாநாட்டில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விழித்துக் கொண்டு போர்க்கால வேகத்தில் கரியமில வாயு வெளி யாகும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் கால நிலை அவசர நிலையை அரசுகள் உடனடியாக பிரகடனம் செய்ய வேண்டும்”என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.