அரசியலில் கமலை எதிர்க்க மாட்டேன்!- ரஜினி ஓப்பன் பேட்டி! – AanthaiReporter.Com

அரசியலில் கமலை எதிர்க்க மாட்டேன்!- ரஜினி ஓப்பன் பேட்டி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்ப்பில் சென்னையில் இன்று(ஏப்ரல் 8) போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், மத்திய அரசும், கர்நாடகாவும் ஒப்புக்கொள்ளவில்லை, கேரளா ஒப்புக்கொள்ளவில்லை, திட்டங்கள் என்றால் என்ன என்று காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நான் மத்திய அரசுக்கு சொல்வது ஒன்றேதான். அனைத்து தமிழக மக்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கை, காவிரி மேளாண்மை வாரியம், அனைத்து மக்களின் வலுவான ஒரே குரல் காவிரி மேலாண்மை வாரியம், இது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமைக்காவிட்டால் அனைத்து தமிழர் களின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக வேண்டியிருக்கும் அதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல கட்சிகள், விவசாய சங்கங்கள், வியாபார சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. நாம் யாருக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை. ஒரு ஏக்கர், அரை ஏக்கர், கால் ஏக்கர் வைத்திருக்கிற ஏழை விவசாயிகளுக்காக நாம் போராடுகிறோம். அவர்கள் மூன்று போகம் விவசாயம் செய்தாலே இரண்டு வேலைதான் சாப்பிடுவார்கள். அவர்களுக்காக நாம் போராடுகிறோம், அவர்கள் முகத்தை முன்னிறுத்துங்கள். அவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டட்டும். அவர்கள் கஷ்டம், கண்ணீர், போராட்டம், வேதனை அதை முன்னிறுத்தி போராடினால்தான் இந்த போராட்டத்துக்கு ஒரு வலு கிடைக்கும். அந்த ஏழை விவசாயிகள் ஆதங்கம், வேதனையை கர்நாடக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளாவிட்டால் கூட அங்குள்ள விவசாயிகள் புரிந்துகொள்வார்கள். அது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இயற்கை, இறைவன் இரண்டும் ஒன்றுதான். பஞ்சபூதங்கள் சேர்ந்தது தான் இயற்கை. இந்த நான்கும் சேர்ந்தது தான் மனிதனின் உடல் உருவாகிறது. இந்த நான்கில் எது கெட்டுப் போனாலும் உலகமே அழிந்துவிடும், மனித குலமே அழிந்துவிடும். ஆகவே மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்துவதை விடவே கூடாது. இதனால் பல லட்சம் கோடி பணம் அரசாங்கத்துக்கு வருமானம் கிடைத்தாலும், பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்தாலும் அதை அனுமதிக்கவே கூடாது. அது போன்ற தொழிற்சாலை நடத்துபவர்கள் பணம் சம்பாதிக்கலாம், ஆனால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர்கள் சந்ததியும் நல்லா இருக்காது. அதற்காக தொழிற்சாலையே கூடாது என்று சொல்லவில்லை. இந்தக் கட்டுப்பாட்டுக்குள், சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசு இல்லாமல் செய்ய வேண்டும், இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

நடிகர் சங்கம் சார்பாக மவுனப் போராட்டம் நடத்துகிறார்கள், உங்கள் இயக்கம் சார்பாக தனியாக போராட்டம் நடத்துவீர்களா என்று கேட்கிறார்கள். எல்லோரும் சேர்ந்துதானே போராடுகிறோம். அங்கே போராட வேண்டாம் இங்கே உண்ணாவிரதம் இருக்கலாம் எனச் சொன்னார்கள். இப்போது மவுனப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுக் கொண்டிருக்கிறேன்.” என்று ரஜினி தெரிவித்தார்.

காவிரி பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் கர்நாடகாவில் திரைப்படம் வெளியிட விடமாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த ரஜினி, ”நாம் ஒன்றும் தப்பு செய்யவில்லை, நியாமான கோரிக்கைக் காக போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு தடை என்றால் அதை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொள்வார்கள், அதையும் மீறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் கர்நாடக அரசு நிச்சயம் பாதுகாப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கன்னடர் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, “அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் எங்கும் பணியாற்றலாம். எனினும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் இந்த நியமனத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி, “அரசியலில் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் எனது எதிரியே அல்ல. என்னுடைய எதிரி ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம், லஞ்சம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து இன்னும் நாட்டுரிமை பெறாமல் உள்ள மக்களின் அவலம் போன்றவைதான் என் எதிரிகள். நிறையப் பேசினால், நிறைய எதிரிகள்தான் வருவார்கள். பேசிப் பேசி அரசியல் செய்ததெல்லாம் போதும்” என்றும் தெரிவித்தவர் காவிரி விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும். ஐபிஎல் போட்டியை காண செல்லும் ரசிகர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.