நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? ரஜினி பேட்டி – AanthaiReporter.Com

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? ரஜினி பேட்டி

பார்லிமெண்டுக்கும், அசெம்பளிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது, “காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது தமிழக மக்கள் மற்றும் என்னுடைய ஆசை.தமிழகத்தில் கல்வி வளர்ச்சி என்பதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இங்கு இன்னும் கல்வி வளர்ச்சி தேவை. அதை தற்போதைய அரசு நன்றாக செய்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

காந்திய மற்றும் காமராஜர் கொள்கையை தத்துவக் கொள்கையை உடையவர் தமிழருவி மணியன். அவர் அரசியலில் என்னுடன் இணைய நினைத்தால் மகிழ்ச்சிதான். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நினைப்பும், உழைப்பும் இருந்தால் நிச்சயம் நன்மை நடைபெறும்.

தமிழகத்தில் ஊழல் இருக்கிறது என்பது அமித் ஷா கருத்து, அதுகுறித்த விளக்கத்தை அவர்தான் அளிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. இதனால் நேரம், பணம் உள்ளிட்டவை சேமிக்கப்படும். தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஒரே மாதிரியான கருத்து இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏனென்றால் அதற்கு நேரம் இருக்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் தேவை. 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவானால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். வேலை கிடைக்கும்.இதற்கான இழப்பீடுகளை அரசு முழுமையாக தர வேண்டும். இதில் விவசாயம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்திவாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும். எதற்கெடுத்தாலும் விமர்சிப்பது மிகச் சுலபம் என்று ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று தெரிவித்தார்.

முன்னதாக சாலையில் கிடந்த ரூ. 50 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!

ஈரோட்டில் துணி வியாபாரம் செய்து வரும் பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். அவர் சின்ன சேமூர் அரசி பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் யாசின், பள்ளி அருகே கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.

சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்தச் சிறுவனின் செயலை பொதுமக்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாசினின் வீட்டுக்குச் சென்ற ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனையும், அவனின் பெற்றோர்களையும் கௌரவித்துள்ளனர்.

பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட பிள்ளை என சிறுவன் யாசினிற்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் புகழ் மாலை சூட்டினார். யாசினின் குடும்ப நிலையை அறிந்து அனைவரும் உதவ முன்வந்த நிலையில், அதை ஏற்காமல் நன்றியை மட்டுமே அவனது குடும்பத்தினர் தெரிவித்தார்கள். அப்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தெரித்திருந்தான். மேலும், யாசினுக்கு தங்க செயினை பரிசளித்ததொடு அவரின் படிப்பு செலவை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துக் கொல்லுவதாகவும் தெரிவித்துள்ளார்.