ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்!

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி! – கொஞ்சம் பிளாக் பேக் ரிப்போர்ட்!

‘’நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்று பகிரங்கமாக இன்று ரஜினிகாந்த் அறிவித்து இருப்பது அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 22 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அவர் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்தினார். முன்னதாக  மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த போது ‘போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவர் கூறியிருந்தார். அதன் பின் ‘2.0, காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் ரசிகர்களுடனான சந்திப்பை தள்ளி வைத்தார். தற்போது ரசிகர்களைச் சந்தித்து வரும் ரஜினிகாந்த்  31ம் தேதி (இன்று) அரசியல் பற்றிய அவருடைய நிலையை  அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ரசிகர்களிடையே பேசிய ரஜினி, “நான் எல்லாத்தையும் ஏற்கெனவே முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி, நான் அரசிலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிப்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடலை. பாராளுமன்றத் தேர்தல்ல முடிவெடுப்பேன்” என்றார்..

தற்போதைய நிலையில்  தமிழத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரிய அளவில் வெற்றிடம் ஏற்பட்டுளள்து. திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை யில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் மக்களைக் கவரும் ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும்  கடந்த முறை தனது ரசிகர்களை சந்தித்தபோது, ‘’சிஸ்டம் சரியில்லை. கிளீன் செய்ய வேண்டும் ‘’ என்று பேசியவர் இன்று “.ஜன நாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க.இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கலைன்னு சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்காக நான் இந்த முடிவெடுக்கலன்னா அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும். அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்தாச்சி, சிஸ்டமே மாத்தணும்” என்று குறிப்பிட்டார்.

இத்தனைக்கும் ரஜினி நம்மூர் அரசியலுக்கு புதியவர் இல்லை. கடந்த 1995ஆம் ஆண்டில் தனது முத்து படத்தில் நான் எதற்கு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நேரம் தான் இதை தீர்மானிக்கும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டில், இப்படியே சென்றால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று பகிரங்கமாக ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.

அது அப்போது நடந்த தேர்தலில் பெரிய அளவில் பிரதிபலித்து, திமுக வெற்றி பெற வழி வகுத்தது.மேலும், கடந்த 2002ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள அனைத்து உள்ள ஆறுகளையும் இணைக்க வேண்டும். அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து 2014ல் நான் அரசியலுக்கு வர வேண்டுமா? வரவேண்டாமா? என்பதை கடவுள்தான் முடிவு செய்வார் என்றார். இதையடுத்து 2002ஆம் ஆண்டில் பாபா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சிகள் இருந்தது. இதற்கு பா.ம.க., தலைவர் ராமதாஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

பின்னர் 2004ஆம் ஆண்டு அதிமுக, பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். அப்போது பாஜக தேசிய நதிகள் இணைப்பு குறித்து அறிவித்து இருந்தது.

2008ல் அரசியல் வெற்றிக்கு காரணம் திறமை, அனுபவம், கடும் உழைப்பு என்று சொல்வது முட்டாள்தனம். இது அனைத்தும் நேரம், சமய சந்தர்ப்பத்தை சார்ந்தது. நேரம் சரியில்லை என்றால், எதுவும் உதவி செய்யாது என்று தெரிவித்து இருந்தார்.

கடந்த 2014ல் சென்னை வந்து இருந்த பிரதமர் மோடி, ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நான் அதிகாரத்தை விரும்புகிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். உடனடியாக இதை வாபஸ் பெற்று, ஆன்மீக அதிகாரத்தை கூறினேன். வேறு அதிகாரங்கள் எதையும் கூறவில்லை என்று தெளிவு படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். தமிழத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் சம்பவங்களால் தமிழர்களைப் பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் சிரித்து வருகின்றனர் இன்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி, ‘’ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும்’’ என்று பேசியுள்ளார்.  அத்துடன் ‘ உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம், குறி. அது ஒரு தனி மனுஷனால முடியாது.தமிழக மக்கள் எல்லாரும் என் கூட இருக்கணும். இது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பிச்சி, தேர்தல்ல போட்டியிடறது சாதாரண விஷயமில்ல. நடுக்கடல்ல முத்து எடுக்கிற மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னார். நம்மை  திராவிட நாடு என்று அழைத்து வரும்போது, இவரது பேச்சு எடுபடுமா என்ற கேள்வி எழுகிறது. அரசியலில் இவர் பல சவால்களை கடந்து செல்ல வேண்டியது உள்ளது எனப்து மட்டும் உண்மை!.

Related Posts

error: Content is protected !!