ரஜினி பேச்சு – நல்ல ஆரம்பம். இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்!. – AanthaiReporter.Com

ரஜினி பேச்சு – நல்ல ஆரம்பம். இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்!.

ரஜனியின் உரையில் எனக்குப் பிடித்தமான சில அம்சங்கள்:

பாசிட்டிவ்வாக இருந்தது. யாரையும் வசைபாடவில்லை. கடந்த பல ஆண்டுகளாக அரசியல் மேடைகளில் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகத் திரிந்து வெறுப்பரசியல் விதைக்கப்பட்டிருக்கும் சூழலில் இது வரவேற்கத் தக்க மாற்றம் என நான் கருதுகிறேன்.அவர் திட்டவட்டமாக திட்டுகிற அரசியல் வேண்டாம் என் ன்று சொல்கிறார். அநதக் கலாசாரம் பரவட்டும்.

தனக்கு முந்தைய தலைமுறை அரசியல் தலைவர்களை எதற்குப் பாராட்ட வேண்டுமோ அதற்குப் பாராட்டினார். எம்ஜியாரின் பாப்புலாரிட்டி, சத்துணவுத் திட்டம், கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, ஆகியவற்றிற்காகப் பாராட்டினார். அதற்காக அவர்கள் தவறே செய்யவில்லை என்று அர்த்தமில்லை என்பதையும் சில குறிப்புகளாலும், ஓரிடத்தில் தன் ‘கபாலி’ சிரிப்பாலும் உணர்த்தினார். அவர்களிடமிருந்த ஆக்கபூர்வமான அம்சங்களை எடுத்துக் கொண்டு நாம் மேலே நகரலாம் என்ற அணுகுமுறை ஆரோக்கியமானது.

ஆங்கிலத்தின் அவசியத்தை எடுத்துரைத்தது. இது புதிது இல்லை. தமிழகம் நெடுங்க்காலமாகப் பின்பற்றி வரும் நடைமுறைதான். “ஆங்கிலம் வேணாம்னா அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும்னேன்” என்ற காமராஜின் அணுகுமுறையும், மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுத்த அண்ணாவின் நிலையும் என் நினைவுக்கு வந்து போயிற்று. அதே நேரம் தமிழ் என்பதை உணர்ச்சிகளைக் கூர் தீட்டி வாக்கு அரசியலுக்குக் கருவியாகப் பயன்படுத்தும் அணுகு முறையை அவர் நிராகரித்தார். தமிழ் வாழ்க என்று முழங்கினால் அது வளராது, தமிழன் நிலை உயர்ந்தால் தமிழ் உயரும் என்ற சிந்தனை யதார்த்தமானது. அறிவில், அறிவியலில், பொருளா தாரத்தில், அரசியலில், ஆளுகையில் தமிழர்கள் வலுப்பெறும் போது தமிழின் செல்வாக்கும் மேம்படும்.

அவர் நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த தொனியிலும், அவரது உடல் மொழியிலும் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. ஆனால் ஆணவம் வெளிப்படவில்லை

அவர் என்ன சொல்கிறார் என்பதை எவரும் விளங்க்கிக் கொள்ளும் வகையில் இருந்தது பேச்சு. தன் எண்ணங்களில் தெளிவும் நம்பிக்கையும் உள்ளவராலேயே இப்படி மற்றவர் புரிந்து கொள்ளும்படி பேச முடியும். அது இல்லாத வர்கள்தான் புரியாத மொழியில் பூசி மொழுகி மழுப்புவார்கள்.

நல்ல ஆரம்பம். இறையருள் உங்களுக்குத் துணை நிற்கட்டும்.

மாலன்