கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ; உடனடி நிவாரண நிதி 100 கோடி – ராஜ்நாத் சிங் அறிவிப்பு – AanthaiReporter.Com

கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ; உடனடி நிவாரண நிதி 100 கோடி – ராஜ்நாத் சிங் அறிவிப்பு

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கன மழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின் றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் அல்போன்ஸ், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களையும், சேத விவரங்களையும் அவர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விளக்கினர்.

பின்னர் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். பின்னர் மத்திய குழு பார்வையிட்டு தேவை யான நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பு மிக மோசமாக உள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுக்கு தேவையான உதவி களை மத்திய அரசு செய்யும். இரண்டு கட்டமாக ஏற்கெனவே 80 கோடி ரூபாய் என்ற அளவில் கேரளாவுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கேரள அரசு கோரியுள்ளது. மத்திய குழு பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட கால தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது’’ எனக் கூறினார்.