சர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின் ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ ! – AanthaiReporter.Com

சர்ச்சையைக் கிளப்பப் போகும் ஆ.ராசா-வின் ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ !

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ராசா உட்பட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் தான் எதிர்கொண்ட நெருக்கடிகள், இந்த விவகாரம் பற்றிய சட்ட ரீதியான, அரசியல் ரீதியான உண்மைகள் ஆகிய வற்றைத் தொகுத்து இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு புத்தகமாக எழுதினார் ஆ.ராசா. ஆனால் தீர்ப்பு வருவதற்குள் அதை வெளியிட வேண்டாம் என்று அவரது நலம் விரும்பிகள் சொன்ன யோசனையை ஏற்று புத்தக வெளியீட்டை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் தீர்ப்பில் தான் விடுதலையான நிலையில், “2G SAGA Unfolds” என்ற ஆ.ராசாவின் ஆங்கிலப் புத்தகம் ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் சார்பில் இன்று வெளியிடப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வை ஒட்டி நேற்று இரவு அதே அரங்கத்தில் நூல் ஆசிரியரான ஆ.ராசாவும், பதிப்பாளர் நரேந்திரகுமாரும் ஒரு டின்னர் அளித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், ராசாவின் நண்பர்களான பல வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.

‘’டெல்லியில் இதுபோன்ற புத்தக வெளியீட்டுக்கு முந்தைய டின்னர்கள் வழக்கம்தான். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இதுபோல யாரும் செய்தது கிடையாது. அதை ராசா தனிப்பட்ட முறையில் செய்திருக்கிறார். நேற்று டின்னரில் ஒவ்வொரு டேபிளாக சென்று பத்திரிகையாளர்களோடும், நண்பர்களோடும் கலந்துரையாடினார். இன்று வெளியிட இருக்கும் ஆ.ராசாவின் புத்தகம் இந்திய அளவில் அரசியல் புயலைக் கிளப்பும் விதமாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது’’ என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்திருந்தவரும் இவர் ஒருவரே. முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நட்வர் சிங், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு மிட்டல் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். ஆனால் ராசா வருவதற்கு முன் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

அந்த விருந்தில் பேசிய ஆ. ராசா, தான் கார்ப்பரேட் கம்பனிகளுக்கிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகிவிட்டதாகக் கூறினார். எனக்கு முன்னால் அந்தப் பதவியில் இருந்த தயாநிதி மாறன், ஸ்பெக்ட்ரம் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார். ஸ்பெக்ட்ரம் இருக்கிறது என்பதை அதிகாரிகள் வெளியே சொல்லிவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. நான் சாம் பிட்ரோடாவிடம் கலந்தாலோசித்தேன். அவர், அமைச்சகத்தில் மர்மமான விஷயங்கள் நடக்கிறது என்றும், அதிகாரிகள் என்னைத் தவறாக வழி நடத்துவதாகவும் எச்சரித்தார்.

நான் பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரித்தேன். இது என்னோடு நின்றுவிடாது, நாளை உங்களையும் சுற்றி வளைக்கும் என்றேன். இறுதியில் 2014ல் என்ன நடந்து என்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்று ஆ.ராசா கூறினார்.

முன்னாள் சிஏஜி இயக்குநர் வினோத் ராய் தான் அனைத்துக்கும் காரணகர்த்தா என்று குற்றம்சாட்டிய ராசா, அவரை தீங்கிழைக்கும் எண்ணமுடையவர் என்றார். நஷ்டக் கணக்கை ஊதிப் பெரிதாக்கியதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சதியை விசாரிக்க வேண்டும் என ஆ.ராசா கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவையில் அவ்வளவு வழக்கறிஞர்கள் இருந்தும் யாருக்கும் நடந்துகொண்டிருந்த அரசியல் சதி கண்ணில் படவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

ஸ்வான் டெலிகாமிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 200 கோடி லஞ்சம் பற்றி ஆ. ராசா பேசுகையில், ‘நான் லஞ்சம் பெற்று எனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தகுதியில்லாத ஸ்வான் டெலிகாமை தகுதியுடையதாக ஆக்கினேன் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் நான் அந்த முடிவை சொந்தமாக எடுக்கவில்லை. அவர்களைப் பற்றி சட்ட அமைச்சகம் விசாரித்து உறுதிபடுத்திய பிறகே முடிவெடுத்தேன் என்று ஆ.ராசா கூறினார்.

டெயில் பீஸ்:

அந்த புத்தகத்தில் ஆ.ராசா சொல்லி இருப்பதிலிருந்து சில துளிகள்:

“2ஜி அலைக்கற்றையை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான முழு செயல்முறையையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விளக்கினேன். அந்த முறையை தொடந்து மேற்கொள்வதற்க்ய் ஒப்புதல் பெற்றேன்.

ஆனால், அவருடைய ஆலோசகர்கள் அவருக்கு தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வந்தனர். பிரதமர் அலுவலகத்தில் தொலைத்தொடர்பு நிறுவன்னக்களின் செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு செல்வாக்கு இருந்தது.

எனது முழுமையான, நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கடைபிடித்த உணர்ச்சிமிகுந்த மௌனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மௌனம் ஆக்குவது போல் அமைந்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு புகார்கள் தொடர்பாக, தொலைத்தொடர்பு துறை அலுவலகத்திலும், சில தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமும் சிபிஐ சோதனை நடந்த பின்னர், 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி 7 மணியளவில் பிரதமரை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தேன். அந்த அலுவலகத்தில், அப்போதைய பிரதமர் அலுவலக முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ.நாயர் இருந்தார். அப்போது சிபிஐ சோதனை குறித்து பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள்.

2 ஜி ஊழல் குற்றச்சாட்டுகள், நாட்டின் நிர்வாக அமைப்பின் புனிதத்தன்மையின் மீதான வெட்கக்கேடான குற்றச்சாட்டுகள் ஆகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2 அரசை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தில் புனையப்பட்ட வழக்காகும். அதற்கான துப்பாக்கி, தலைமை கணக்கு தணிக்கையரான வினோத் ராயின் தோளில் வைக்கப்பட்டது எனது நம்பிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.