மழையில் நனைய வைத்தான்: கூடவே தாகத்தால் தவிக்க வைத்தான்!- நீர் மேலாண்மை எச்சரிக்கை! – AanthaiReporter.Com

மழையில் நனைய வைத்தான்: கூடவே தாகத்தால் தவிக்க வைத்தான்!- நீர் மேலாண்மை எச்சரிக்கை!

“ நீரின்றி அமையாது இவ்வுலகம் ”

என்ற திருக்குறளின் ஒரேயொரு வரியிலேயே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் அது மிகையாகாது.

நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். மனிதனின் உடலிலும் 75% நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் , கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியமா கிறது. ஒரு மனிதனின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது,. அதில் 2.7 லிட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் (Dehydration) உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது.

நீர் எனும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப் பொருளாகும். பெருகி வரும் மக்கள் தொகை என்பது ஒருபுறம் இருக்க தொழில் புரட்சியினால் மறைநீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. மூன்றாம் உலகப்போர் மூள்வதாக இருந்தால் அது இந்த நீல தங்கத்திற்காகத் தான் இருக்கும்.

அதனால்தான் “தண்ணீர்” 21 ஆம் நூற்றாண்டின் நீலத் தங்கம் (Blue Gold) என்றும், தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது எனவும், அது ஒரு திரவத் தங்கம் (Water is liquid gold) என கூறுகிறார் வரலாற்று ஆய்வாளரான சர்.ஆர்தர் காட்டன் இந்திய தீபகற்பம் மூன்று மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட “ஆழி சூல் உலகு” என ஆரம்பகால புத்தகங்களில் படித்து வளர்ந்த நாம்.! பிற்காலங்களில் ஆரம்பத்தில் சொன்ன “நீரின்றி அமையாது உலகு” என்கிற வாசகங்களை வாகனங்களில் படித்துவிட்டு, அந்த நீருக்காகவே இன்று அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

நம் தேசத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தினை காண்கிறோமோ இல்லையோ.! ஆண்டுக்கு ஒருமுறை நிச்சயமாக சாலைகளில் தண்ணீர் குடங்களை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகவும், ஊர் ஊராகவும் மக்கள் அலைவதையும். அவர்கள் படும் அல்லல்களை ரசித்துக் கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.! எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரின் அவசியத்தை எடுத்துச் சொல்லாமல்.

பல காலங்களில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்தாலும், 2015 ஆண்டு கணக்கின்படி இந்த இரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக 958 மி.மீட்டர் கிடைப்பதாக தெரிவிக்கிறது மாநில வானிலை ஆராய்ச்சி மையம். அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீட்டரும், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீட்டரும் கிடைக்கிறதாக தெரிவிக்கிறது.

குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீட்டர் நீரும் கிடைக்கிறது, தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களிலே அதிகம் பெய்கிறதால், இதில் கிடைக்கக்கூடிய அதிகப்படியான அளவு நீர் கடலில் கலந்துவிடுகிறதாகவும்.கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் தமிழகம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்.

அனைத்து தேவைகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரினை உறிஞ்சிடும் மெட்ரோ நகரங்களில், மக்கள் தொகை பெருக்கம், மற்றும் தண்ணீரின் தேவை காரணமாக தமிழகத்தில் நிலத்தடிநீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாகவும். எதிர்கால திட்டங்களை இப்போதே வகுத்துக்கொள்ளுங்கள் என்று 2016 ஆண்டே தமிழக நீர்வத்துறையை எச்சரித்திருந்தது தேசிய நீர் மேலாண்மை வாரியம்.

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல். தான்தோன்றி தனமாக அரசியல் செய்த ஆளுங்கட்சியின் அவலங்களை தான் இன்று இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. உலகில் இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீருக்காகப் போர் நிகழும் என்று அவ்வப்போது விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறி வருகின்ற இந்த வேலையில், இப்போதே நீருக்காக ஒரு பெரும் புரட்சிப் பயணம் தொடங்கியிருக்கிறது தமிழகத்தில்.

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

லட்சக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகளும் கோடிக்கணக்கான போர்வெல் பம்புகளாக இந்திய தேசத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை தினம் தினம் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர் இந்த தேசத்து மக்கள். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கினால் உருவான இத்தகைய நிலத்தடி நீர்வளம் தமிழகத்தில் இருப்பது 22,423 மி.க.மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம். தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான்.

இப்படி அதல பாதாளத்தில் உள்ள நிலத்தடி நீரை உயர்த்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது மழை நீர் சேகரிப்பு திட்டம். வீடு, வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, மழை நீர் சேமிப்பு கட்டமைப்புக்கும், வரைபடம் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இன்று இந்த திட்டம் வெறும் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது தமிழகத்தில். குடியிருப்புகளை காட்டிலும் அரசு அலுவலகங்களிலே முன்பு அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பானது அரசு இயந்திரங்களின் சுணக்கத்தால் காணாமல் போயுள்ளது என ஊர்ஜிதமாகவே கூறலாம்.

குறிப்பாக சென்னையில் இருக்கும் பெரும்பான்மையான அடுக்குமாடி அபார்ட்மென்ட்ஸ் மற்றும் இல்லங்களில் மண் தரையே இல்லாத அளவுக்கு கட்டப்படுகின்றன. இதனால், மழைநீர் நிலத்தில் ஊர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போகின்றது. கடந்த 3 வாரங்களில் மட்டும் சென்னையில் 19 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாம். ஆனால், அதில் பெரும்பான்மையான நீர், கடலில்தான் கலக்குவிடப்பட்டதாம்.