தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடு ;19 செயலிகளுக்கு (ஆப்) இந்திய ரயில்வே தடை! – AanthaiReporter.Com

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடு ;19 செயலிகளுக்கு (ஆப்) இந்திய ரயில்வே தடை!

 

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் வந்ததையடுத்து அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி முறைகேட்டை தடுத்தனர். அதன்பிறகும் தட்கல் முன்பதிவு முறைகேடு முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. டிராவல் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் ரெயில் நிலையங்களிலும், ஓடும் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல டிராவல் ஏஜெண்டுகள் பிடிபட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப்பிரச்சினை பற்றி பலகோணங்களில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே நிர்வாகம் தற்போது தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, நாடுமுழுவதும் 19 செயலிகளுக்கு (ஆப்) இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.

அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தட்கல் ரயில் டிக்கெட் முறை கை கொடுத்து வருகிறது. இதனால் தட்கல் முறையில் டிக்கெட் வாங்க கடும் போட்டி நிலவும். தட்கல் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்துவிடும் என்பதால் ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதாக இருக்கும். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் நிறுவனங்கள் மென்பொருளில் மாற்றம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் 19 செயலிகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வேதுறை தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் சில தனியார் இணையதளங்கள், செயலிகள் (ஆப்) மூலம் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 19 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றனர்.